பைனலுக்கு முன்னேறுமா ஜெர்மனி? *இங்கிலாந்துடன் இன்று மோதல்
புதுடில்லி: உலக கோப்பை ஹாக்கி தொடரில், இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி, ஐரோப்பிய சாம்பியன் இங்கிலாந்து அணியை சந்திக்கிறது. இதில் ஜெர்மனி வெற்றி பெறும் பட்சத்தில் நான்காவது முறையாக (1982, 2002, 2006, 2010), உலக கோப்பை பைனலுக்கு முன்னேறலாம். மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
டில்லியில் உள்ள தயான்சந்த் தேசிய மைதானத்தில் 12வது <உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 அணிகள், இரண்டு பிரிவுகளாக லீக் போட்டியில் மோதின. லீக் சுற்றின் முடிவில் "ஏ' பிரிவில் ஜெர்மனி (11 புள்ளி), நெதர்லாந்து (10 புள்ளி) அணிகளும், "பி' பிரிவில் ஆஸ்திரேலியா (12 புள்ளி), இங்கிலாந்து (12 புள்ளி) அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
ஜெர்மனி ஆதிக்கம்:
இதுவரை நடந்துள்ள 12 உலக கோப்பை ஹாக்கி தொடரில், ஜெர்மனி அணி 11 முறை அரையிறுதிக்கு முன்னேறி, சாதனை படைத்துள்ளது. இதில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் (2002, 2006) வென்றது. ஒரு முறை (1982) பைனலில் தோல்வியைடந்தது. மூன்று முறை 3வது (1973, 75, 86) இடமும், நான்கு முறை 4வது (1978, 90, 94, 98) இடமும் பெற்றது. கடந்த 1971ல் பார்சிலோனாவில் நடந்த தொடரில், அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியது. இங்கிலாந்து அணி முன்னதாக ஒரே ஒரு முறை (1986) மட்டும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதில் பைனலுக்கு முன்னேறிய இங்கிலாந்து, கோப்பை வெல்ல தவறியது.
ஐந்தாவது முறை:
இன்றைய அரையிறுதியில் விளையாடும், ஜெர்மனி-இங்கிலாந்து அணிகள் உலக கோப்பை அரங்கில், ஐந்தாவது முறையாக மோதுகின்றன. முன்னதாக மோதிய நான்கு போட்டியில் ஜெர்மனி 2 (1975, 1990), இங்கிலாந்து ஒரு போட்டியில் (1986) வெற்றி பெற்றன. ஒரு போட்டி "டிரா' (1978) ஆனது.
"ஹாட்ரிக்' வாய்ப்பு:
கடந்த 2002, 2006ல் சாம்பியன் கோப்பை வென்ற ஜெர்மனி அணி, இம்முறை பைனலுக்கு முன்னேறி கோப்பை வெல்லும் பட்சத்தில், தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பை வென்று சாதிக்கலாம். ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் ஜெர்மனி அணி, இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இது இங்கிலாந்துக்கு சாதகமான விஷயம். தவிர, இத்தொடரில் ஒரு லீக் போட்டியில் கூட தோல்வி பெறாதது, ஜெர்மனி அணிக்கு பலம் சேர்க்கிறது. இங்கிலாந்து அணி, ஒரு லீக் போட்டியில் தோல்வி கண்டது.
ஆஸி.,-நெதர்லாந்து மோதல்:
இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை அரங்கில் ஆஸ்திரேலியா 8 முறை, நெதர்லாந்து 7 முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா ஒரு முறை (1986) சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டு முறை (2002, 06) பைனலில் தோல்வியடைந்தது. ஐந்து முறை (1978, 82, 90, 94, 98) 3வது இடம் பிடித்தது. ஜெர்மனி அணி மூன்று முறை (1973, 90, 98) சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டு முறை (1978, 94) பைனலில் தோல்வியடைந்தது. தலா ஒரு முறை 3வது (2002), 4வது (1982) இடம் பிடித்தது.
ஒன்பதாவது முறை:
இன்றைய அரையிறுதியில் மோதும் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள், உலக கோப்பை அரங்கில் 9வது முறையாக மோதுகின்றன. இதில் அரையிறுதியில் 5வது முறையாக மோதுகின்றன. முன்னதாக மோதிய எட்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா (1982, 82, 90, 2002), நெதர்லாந்து (1971, 78, 94, 98) தலா நான்கு முறை வெற்றி பெற்றுள்ளன.
பாக்.,-கனடா பலப்பரீட்சை:
இன்று நடக்கவுள்ள 11-12வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான், கனடா அணிகள் மோதுகின்றன. முன்னதாக உலக கோப்பை அரங்கில் இவ்விரு அணிகள் இரண்டு முறை (1986, 90) மோதின. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன.






