பெண் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கும் ‘ஸ்கேன்’ மையங்கள்
மதுரை : "ஸ்கேன்' மையங்களால், தமிழகத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் மதுரை, சேலம், தர்மபுரி மாவட் டங்களில் பெண் சிசுக்கொலை அதிகமாக இருந்தது. 1992 ல் மதுரையில் உசிலம்பட்டி, கட்டகருப்பன்பட்டியைச் சேர்ந்த கருப்பாயி என்ற பெண், பிறந்த பெண் குழந்தையை கொன்றதால் கோர்ட்டில் ஆயுள் தண்டனை பெற்றார். அதன்பின், பெண் சிசுக்கொலை குறைய ஆரம்பித்தது.தமிழகத்தில் 1990களில் கருவில் இருக்கும் குழந்தையின் ஊனத்தை கண்டறிய அறிமுகமானது "ஸ்கேன்' இயந்திரம். ஆனால், இக்கருவி பெண் குழந்தையின் தலைவிதியை தீர்மானிப்பதாக அமைந்தது.
குழந்தையை கொன்றால் தண்டனை, கருக்கலைப்பு செய்தால் பிரச்னையில்லை என்பதை, "ஸ்கேன்' மையங்கள் மறைமுகமாக உணர்த்தின. அதன் பின், சில ஆண்டுகளிலேயே 3500 "ஸ்கேன்' மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த வசதியால் கருத்தரித்த 12 வாரங்களிலேயே குழந்தையின் பாலினத்தை அறிய முடிந்ததால், கிராமம், நகரம் வேறுபாடின்றி "பெண் கருக்கலைப்பு" அதிகமாக நடந்து வருகிறது.
பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரத்தின் மூலம் விழிப்புணர்வு செய்து வரும் மாநில மையக்குழு உறுப்பினர் ஜீவா கூறியதாவது :சர்வதேச புள்ளிவிவரங்களின் படி, இந்தியாவில் 1000 ஆண் குழந்தைகள் பிறந்தால், 952 பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும். தமிழகத்தில் பெரும் பாலான மாவட்டங்களில் இந்த விகிதாச்சாரம் இல்லை. சில மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 900, அதற்கும் குறைவான பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த வேறுபாட்டுக்கு முக்கிய காரணம் "ஸ்கேன்' மையங்கள் தான். பெண் கருக்கொலை தடுப்புச் சட்டம் (1994) இயற்றப்பட்டு, 2002ல் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து சொன்னால் அது குற்றம்; அதற்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை உண்டு. ஆனால், 95 சதவீத மையங்களில் இப்போதும் கருவின் பாலினத்தை வெளிப்படுத்தி விடுகின்றனர்.
இதுதொடர்பாக "ஸ்கேன்' மையங்கள் மற்றும் டாக்டர்கள் மீது 76 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. நடவடிக்கை எதுவும் இல்லாததால், பெண் கருக்கொலை தொடர்கிறது. மாவட்ட கலெக்டர், இந்த சட்டத்தை நிறைவேற்றும் அமலாக்க அதிகாரியாக செயல்பட்டு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தவேண்டும். பெரும்பாலான மாவட்டங்களில், கூட்டம் நடப்பதே இல்லை. தனியார் மையங்களில் கருவின் பாலினத்தை கண்டறியும் பெண்கள், அரசு மருத்துவமனையில் இலவசமாக கருக்கலைப்பு செய்து கொள்கின்றனர்.
இதற்கு அரசு வழங்கும் 3000 ரூபாயையும் பெற்றுக் கொள்கின்றனர். இது, பெண் கருவை கலைப்பதற்கு அரசே உதவுவது போலிருக்கிறது. "ஸ்கேன்' மையங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டதா, உரிமம் புதுப்பிக்கப்படுகிறதா என்று ஆய்வு நடத்தப்படுவதில்லை. "ஸ்கேன்' மையங்களை அரசு கடுமையாக கண்காணிக்க வேண்டும். இதன் மூலமே, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க முடியும். இல்லாவிட்டால் பெண்கள் மீதான ஆணாதிக்க தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்றார்.






