ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு
சேலம் : ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால், நித்யானந்தரின் சீடராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்காட்டிலுள்ள பிரபல எஸ்டேட் அதிபர்களும், நித்யானந்தரின் சீடர்களாக உள்ளனர். சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில் நித்யானந்தா மூன்று நாள் தங்கி, பிரசங்கம் மற்றும் நித்ய நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவரது தேவைகளை எஸ்டேட் அதிபர்கள் பலர், பூர்த்தி செய்தனர். நித்யானந்தாவின் உருவப் படத்தை, "விசிட்டிங் கார்டு'களில் அச்சிடும் அளவுக்கு, அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். சமீபத்தில் வெளியான நடிகையுடனான நித்யானந்தரின் வீடியோ காட்சியை கண்ட எஸ்டேட் அதிபர்கள், அவரது உருவப்படம், புத்தகங்கள், பாடல், "சிடி'யை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்ட நேரம், ஏற்காடு கிராம பகுதியில் காவி உடையணிந்த ஆசிரமவாசிகள் சிலரின் நடமாட்டம் இருந்தது. ஏற்காட்டில் உள்ள அதிபர்களின் எஸ்டேட் பங்களாக்களில் நித்யானந்தா உள்ளிட்ட ஆசிரமவாசிகள் தஞ்சம் அடைந்துள்ளதாக மக்களிடையே தகவல் பரவியது.
ஏற்காடு கீரைக்காடு பகுதியில் உள்ள 30 ஏக்கர் பரப்பளவிலான ஆசிரமத்தை, ஏற்காடு எஸ்டேட் அதிபர் ஒருவர் வாங்கி கொடுத்துள்ளார். ஆசிரமம் பகுதியில், கீரைக்காடு புத்தூரைச் சேர்ந்த மக்களின் வழித் தடம் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தை ஆசிரம நிர்வாகத்தினர், சமீபத்தில் கட்டை போட்டு அடைத்தனர். கீரைக்காடு பகுதியில் உள்ள ஆசிரமத்தில் விசாரித்த போது, "இது திருச்சி மகா சுவாமிகள் ஆசிரமம். ஜெயேந்திரபுரி மகா சுவாமிகளை ஏற்று இயங்கி வருகிறோம். நித்யானந்தா, இந்த ஆசிரமத்துக்கு வந்தது இல்லை; அவருக்கும் இந்த ஆசிரமத்துக்கும் தொடர்பில்லை' என, அங்கிருந்தவர் தெரிவித்தார். எஸ்டேட் உரிமையாளர் கண்ணப்பனும் இதையே தெரிவித்தார்.
புத்தூர் கிராம மக்கள் கூறுகையில், "பெங்களூருவைச் சேர்ந்த ஆசிரம வாசிகளின் நடமாட்டம் இப்பகுதியில் இருந்தது. இரவு, பகல் நேரங்களில் கார்களில் காவி உடை அணிந்தவர்கள் வந்து சென்ற வண்ணமாக இருந்தனர். நித்யானந்தா வீடியோ காட்சி பிரச்னையான அடுத்த தினம், கார்களில் காவி உடை அணிந்தவர்கள் பலர் வந்தனர்' என்றனர். நித்யானந்தா பிரச்னையில் சிக்கியுள்ள நிலையில், ஏற்காட்டில் ஆசிரமவாசிகள் நடமாடியது மக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. நித்யானந்தாவின் சீடர்கள் பெரும்பாலும் வெள்ளை உடையும், மூத்த சீடர்கள் மட்டுமே காவி உடை அணிவதால், நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்காடுக்கு வந்துள்ளனரா அல்லது வேறு ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களா என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முகம் சுளிக்க வைத்த நித்ய நடனம்: சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில், நித்யானந்தா நித்ய நடன நிகழ்ச்சி நடந்தது. நித்ய நடனத்தில் பங்கேற்றவர்களிடம் 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கூடத்தில் நடந்த நித்ய நடனத்தில், ஆண்களும், பெண்களும் லயித்து ஆட பயிற்சி அளிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிலர், நடன அசைவுகளில் உடன்பாடு இல்லாமல், முகம் சுளித்தபடி வெளியேறியுள்ளனர்.






