புதிய தலைமை செயலகம் : மத்திய பாதுகாப்பு குழு ஆய்வு
சென்னை: புதிய தலைமைச் செயலக திறப்பு விழாவிற்கு பிரதமர் வருகையை முன்னிட்டு, வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்தை மத்திய பாதுகாப்புக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
சென்னை ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில், புதிய சட்டசபைக் கட்டடம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் 13ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கும் விழாவில், பிரதமர் மன்மோகன்சிங் புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை துவக்கி வைக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். திறப்பு விழா நிகழ்ச்சிக்காக, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் அருகே கான்கிரீட் மேடை அமைக்கப்படுகிறது. மேடைக்கான செட் அமைக்கும் பணி, பார்வையாளர்கள் அமரும் பகுதியைத் தயார்படுத்தும் பணி ஆகியவை வெகுவேகமாக நடந்து வருகிறது.
சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதிய தலைமைச் செயலக திறப்பு விழா நடைபெறும் இடத்தை, டில்லியிலிருந்து வரும் சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் இன்று(நேற்று) ஆய்வு செய்தனர். பிரதமர், சோனியா இருவரும் விமான நிலையத்திலிருந்து நேரடியாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகின்றனர். இந்நிகழ்ச்சிக்காக நான்கு கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் முதற்கட்டமாக, புதிய தலைமைச் செயலகத்தைச் சுற்றியுள்ள மேன்ஷன்கள் மற்றும் லாட்ஜ்களில் கடந்த 15 நாட்களாக சோதனை நடத்தி வருகிறோம். புதிய தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் வெளியாட்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, வளாகத்தை நாளை முதல் எங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம். பின் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மூலம் வளாகம் முழுவதும் சோதனையிடப்படும்.
திறப்பு விழா நிகழ்ச்சியின்போது, என்னுடன் இரண்டு கூடுதல் கமிஷனர்கள், மூன்று இணை கமிஷனர்கள் உட்பட மொத்தம் 5,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோம். வரும் 12ம் தேதியே மூன்றில் ஒரு பங்கு போலீசார் புதிய தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இணைக் கமிஷனர், துணைக் கமிஷனர், மூன்று உதவி கமிஷனர்கள் பாதுகாப்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர். வரும் 13ம் தேதி கத்திப்பாரா மேம்பாலம் வீரன் சின்னமலை சிலை முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை பிரதமர், சோனியா வரும் வழியில் பாதுகாப்பு போடப்படும். மே தினப் பூங்கா, மன்றோ சிலை அருகே, நேப்பியர் பாலம் அருகே என மூன்று இடங்களில் பொதுமக்கள் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக எல்.சி.டி., ஸ்கிரீன் அமைக்கப்படுகிறது. புதிய தலைமைச் செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில், 13ம் தேதி மதியத்திற்கு பிறகு கடைகள் மூடப்படும். சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் நாளை மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி ஒத்திகை நடத்துவர். திறப்பு விழா நிகழ்ச்சியில் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.
புதிய தலைமைச் செயலக வளாகத்தில், முதல்வர் கருணாநிதி உட்பட முக்கிய நபர்கள் சிலர் மட்டும் செல்வதற்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக பிரதமர், சோனியா, முதல்வர் மூவரும் பேட்டரிக் கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு செல்கின்றனர். திறப்பு விழா நிகழ்ச்சியை முன்னிட்டு, புதிய தலைமைச் செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் மற்றும் லாட்ஜ்களை இரு தினங்கள் மூட போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.






