கழிப்பறை கட்டுமான பணியில் மாணவர்கள் : பெற்றோர்கள் அதிருப்தி
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பள்ளி கழிப்பறை கட்டுமான பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதால் பெற்றோர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி துறை மூலம் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் துவங்கியதிலிருந்தே பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் ,பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளனர். அரசும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை முறையாக பயன்படுத்தாமல் லாப நோக்கத்தோடு செயல்படுத்துவதாக தொடர்ந்து எழுந்த புகாரால், மாவட்டத்தில் திட்டம் பின்தங்கிய நிலையில் உள்ளது. குறிப்பாக முதற்கட்டமாக ஒவ்வொரு பள்ளிக்கும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 40 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. இதை லாபநோக்கோடு மிச்சப்படுத்தும் எண்ணத்தில் பள்ளியில் கட்டமான பணிகளுக்கு பள்ளி குழந்தைகளையே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு குழந்தை தொழிலாளர்களை ஒழித்து, குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என அரசு பல திட்டங்களை கொண்டு வந்து, கல்வி நிதி உதவிகளை வழங்கி வருகிறது. ஆனால், சில பள்ளிகளில் இதுபோன்று குழந்தை தொழிலாளர் முறையை நடைமுறையில் வைத்து உள்ளதால் ,அரசு திட்டத்தை, அரசு சார்ந்த துறையே கேலி செய்வது போல் உள்ளது. மாவட்டத்தில் வாலாந்தரவை அரசு உயர்நிலை பள்ளியில் இடைநிலை கல்வி திட்ட நிதியின் கீழ், பள்ளி கழிப்பறை கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இப்பணிக்கு பள்ளி மாணவர்களை மணல் அள்ளும் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.
வாலாந்தரவை பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு உறுப்பினர் செல்வம் கூறியதாவது: மாணவர்களை பள்ளியில் மணல் அள்ளுவதை பார்த்து இதுபோல் 'பணிகளில் ஈடுபடுத்த கூடாது' என கூறினேன். ஆனால், யாரும் கண்டு கொள்ளவில்லை. கல்வி துறை அலுவலகத்திற்கு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். அவர்களும் இதை பெரிய விஷயமாகவே எடுத்து கொள்ளவில்லை. இடைநிலை கல்வி திட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்துவதில்தான் குறியாக உள்ளனர், என்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:பள்ளியில் மாணவர்களை வேலை செய்யவிட கூடாது. வாலாந்தரவை பள்ளியில் மாணவர்கள் மணல் அள்ளியதாக எனக்கு தகவல் வரவில்லை. அது உண்மையாக இருந்தால் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்பேன், என்றார்.






