தியான பீட தலைவர் பதவி நித்யானந்தா விலகினார்
சென்னை : நடிகையுடன் தொடர்புள்ளதாக சர்ச்சைக்குள்ளான சாமியார் நித்யானந்தா, தியான பீட தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா, கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமத்தை ஏற்படுத்தி, தியானம் உள்ளிட்ட யோகா கலைகளை போதித்து வந்தார். இந்த ஆசிரமத்தின் தியான மையங்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் உள்ளன. கோடிக்கணக்கில் இந்த ஆசிரமத்திற்கு சொத்துக்களும் உள்ளன.இந்நிலையில், பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா உள்ளிட்ட பல பெண்களுடன் படுக்கை அறையில் நெருக்கமாக உள்ளது போன்ற படங்கள் வெளியாயின. இதையடுத்து, இவரது தியான மையங்கள் பல இடங்களில் தாக்குதலுக்குள்ளாயின. நித்யானந்தா சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். கர்நாடக போலீசாரும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், தியான பீடத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, நித்யானந்தா மிஷன் வெப்சைட்டில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
வெப்சைட்டில் அவர் கூறியுள்ளதாவது:என்னுடைய ஆன்மிக வாழ்க்கையை மற்றவர்களிடமிருந்து விலகி தனித்து தொடர விரும்புகிறேன். புதிய அறக்கட்டளை உறுப்பினர்கள் தியான பீடத்தை நடத்துவார்கள்.கடந்த மூன்று வாரங்களாக என் மீதும், தியான பீடத்தின் மீதும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து ஹரித்துவாரில் நடந்த கும்பமேளாவின் போது கூடிய ஆச்சாரியர்கள் சிலருடன் விவாதித்தேன். அவர்களின் ஆலோசனையையும், உதவியையும் கோரினேன்.அவர்கள் சொன்ன ஆலோசனையின் பேரில் நடக்க முடிவு செய்துள்ளேன். இதன் ஒரு கட்டமாக தியான பீட தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். ஆச்சாரியர்கள் சொன்ன படி தனித்திருந்து நீண்ட கால ஆன்மிக வாழ்க்கையை தொடர முடிவு செய்துள்ளேன்.தியான பீடத்தில் நான் இல்லாமல் செயல்படுவதற்கு ஏற்ப மாற்றங்களை செய்து கொள்ளும் படி தெரிவித்துள்ளேன்.
பிரச்னையை ஏற்படுத்தாத சாதகர்கள் இனி தியான பீடத்தை ஏற்று நடத்துவார்கள்.தியான பீடம், ஆன்மிகத்துறையில் வழிகாட்டியாக விளங்குவதற்கு ஏற்ப உதவும் படி ஆச்சாரியர்களை கோரியுள்ளேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தியான பீடம் நல்ல முறையில் வளர்ச்சியடைய உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.தியான பீடத்தில் தீட்சை பெற்றால் மட்டும் போதாது, தொடர்ந்து யோகா சாதனைகளை மேற்கொள்ளும் படி சாதகர்களை வேண்டுகிறேன்.சமீபத்தில் பத்திரிகைகளிலும், 'டிவி'க்களிலும் வந்த செய்திகளால் சாதகர்களின் சாதனைகளில் எந்த வித பாதிப்பும் ஏற்படக்கூடாது.தேவைப்பட்டால் நான் மீண்டும் திரும்பி வந்து நடந்த விஷயங்களை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் எடுத்துரைப்பேன்.இவ்வாறு நித்யானந்தா கூறியுள்ளார்.






