பட்டாசு குடோன் வெடித்து சிதறியது : உரிமையாளர் பலி; 34 கட்டடங்கள் சேதம் : திண்டுக்கலில் காலையில் நடந்த சோகம்
திண்டுக்கல் : திண்டுக்கலில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில், அதன் உரிமையாளர் தனசேகரன் பலியானார்; 20 பேர் காயமடைந்தனர்; 34 கட்டடங்கள் சேதமடைந்தன.
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் தொந்தியா பிள்ளை சந்தில், 'குரு டிரேடர்ஸ்' என்ற பட்டாசு கடை செயல்பட்டு வந்தது. இங்கு, வாண வேடிக்கைக்கு தேவையான பட்டாசு உட்பட அனைத்து வகை பட்டாசுகளும் விற்கப்பட்டன. இதை ஆர்.வி., நகரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் தனசேகரன்(42) உரிமம் பெற்று நடத்தி வந்தார். நேற்று காலை 8.10 மணிக்கு குடோனுடன் சேர்ந்திருந்த கடையை திறந்த போது, பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில், உரிமையாளர் தனசேகரன் சம்பவ இடத்தில் கருகி பலியானார். குடோனில் வைக்கப்பட்டிருந்த வெடிகள் பலத்த சத்தத்துடன் வெடித்ததால், அருகில் இருந்த நான்கு கட்டடங்கள் தரைமட்டமானது; மேலும் 30 கட்டடங்கள் லேசாக சேதமடைந்தன. திண்டுக்கல் கோட்ட தீயணைப்பு அலுவலர் நமசிவாயம், நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
மாணவி காயம்: இந்த விபத்தில் பட்டாசு கடை அருகில் குடியிருந்த நாராயணன்(48), இவரது மகள் பிரியதர்ஷினி(15), பாப்பாத்தி(70), பார்வதி(60), செல்வம் மகள் விஜயலட்சுமி(15) ஆகிய ஐந்து பேர் படுகாயமடைந்தனர். புகையில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த இவர்களை, தீயணைப்பு படையினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த பிரியதர்ஷினி, திண்டுக்கல் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று கணக்கு பகுதி-2 தேர்வு இருந்ததால் காயத்துடன் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்டு, ஆசிரியர் துணையுடன் திண்டுக்கல் நேருஜி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள மையத்தில் தேர்வு எழுதினார். விபத்து நடந்த இடத்தின் அருகிலுள்ள கட்டடங்கள் சேதமடைந்து கற்கள் சிதறியதில், மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
விபத்துக்கு காரணம்: திண்டுக்கலில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக உள்ளது. இந்த வெப்பத்தால் வெடிகள் உருகி, கடை திறந்தவுடன் வெடித்ததா அல்லது வாழைத்தாரை பழுக்க வைப்பதற்கு அருகிலுள்ள கடையில் போட்ட மூட்டத்தால் தீ பரவி இங்கு வந்ததா, அல்லது மின்கசிவு காரணமாக நடந்ததா என்பது குறித்து, இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதிர்ந்த திண்டுக்கல்: விபத்தை நேரில் பார்த்த வள்ளி கூறியதாவது: நாங்கள் பட்டாசு கடை அருகில் சிறிய ஓட்டல் நடத்தி வருகிறோம். வழக்கமாக பட்டாசுகளை வெடித்து சோதனை நடத்துவர். இது போன்ற சோதனை தான் நடக்கிறது என்று நான் முதலில் நினைத்தேன். அருகில் செங்கற்கள் பறந்து வந்து விழுந்த போது, ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை உணர முடிந்தது. தொடர்ந்து பலத்த சத்தத்துடன் வெடிச் சத்தம் கேட்டதால் பயந்து ஓடினேன். அந்த பகுதி முழுவதும் கரும் புகை எழுந்ததால், வழி தெரியாமல் பலர் திணறினர். இவ்வாறு வள்ளி கூறினார். சம்பவ இடத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி, கலெக்டர் வள்ளலார், எஸ்.பி., முத்துசாமி, நகராட்சித் தலைவர் நடராஜன் ஆகியோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
பட்டாசு கடைகளில் சோதனை: திண்டுக்கல் எஸ்.பி., முத்துசாமி கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு குடோன்களிலும் விபத்து ஏற்படாமல் இருக்க, முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பட்டாசு குடோன்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பட்டாசு விவரம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துகள் இனி நடக்காமல் தடுப்பதற்கு டி.எஸ்.பி.,க்கள் சோதனை நடத்தி அறிக்கை தருமாறு வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு எஸ்.பி., முத்துசாமி கூறினார்.






