பிர்லா கோளரங்கத்தில் புதிய நிகழ்ச்சி
சென்னை : ''அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் மனித இனத்தின் வளர்ச்சிக்கு மாணவர்கள் பங்களிப்பு அவசியம்,'' என, வளர்ந்து வரும் சமுதாயத்திற்கான அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் கங்கா ராதாகிருஷ்ணன் கூறினார்.
பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் உள்ள பி.எம்.பிர்லா கோளரங்கத்தில், 'விண்வெளியுகத்தின் விடியல்' என்ற தலைப்பிலான கோளரங்க நிகழ்ச்சியின் துவக்க விழா நேற்று நடந்தது. இதில், விண்வெளி ஆராய்ச்சியின் துவக்கம், அதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக, 'விண்வெளியுகத்தின் விடியல்' என்ற தலைப்பிலான புதிய நிகழ்ச்சி குறும்படமாக காட்டப்படுகிறது. இந்நிகழ்ச்சி கோளரங்கத்தில் உள்ள, 'ஸ்கை தியேட்டரில்' நாள்தோறும் மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.
இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து, கங்கா ராதாகிருஷ்ணன் பேசியதாவது: விண்வெளியைப் பற்றி தெரிந்து கொள்வதில் குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். மனித இனத்தின் வளர்ச்சிக்கு அறிவியல் தொழில்நுட்பம் அவசியமாகிறது. அதேசமயம், தொழில்நுட்ப வளர்ச்சியால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அறிவியல் தொழில்நுட்பமும் வளர வேண்டும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டும். அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் மனித இனத்தின் வளர்ச்சிக்கு மாணவர்கள் பங்களிப்பு அவசியம். இளம் பருவத்திலேயே அவர்களிடம் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கங்கா ராதாகிருஷ்ணன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறையின் முன்னாள் இயக்குனர் பாலசுப்பிரமணியன், பேராசிரியர் தேவதாஸ், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இணை இயக்குனர் சவுந்தர ராஜபெருமாள் மற்றும் துணை இயக்குனர் வள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.






