பென்னாகரத்திலும் தி.மு.க., அமோகம் : இரண்டாவது இடத்தை பிடித்தது பா.ம.க., : டிபாசிட்டை இழந்தன அ.தி.மு.க.,- தே.மு.தி.க.,
சென்னை : மதுரை மத்தி இடைத்தேர்தலில் ஆரம்பித்து, தொடர்ச்சியாக இடைத்தேர்தல் நடந்த 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதோடு, 11வதாக நடந்த பென்னாகரம் இடைத்தேர்லிலும் தி.மு.க., அமோகமாக வெற்றி பெற்றது. இரண்டாம் இடம் யாருக்கு என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த இடத்தை பா.ம.க., பிடித்தது. அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும், 'டிபாசிட்'டை இழந்தன.
கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், எப்போதும் இல்லாத தொடர்ச்சியாக இடைத்தேர்தல்கள் வந்தபடி இருந்தன. அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மறைவால், மதுரை மத்தி தொகுதிக்கு முதன் முதலில் இடைத்தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் ஆரம்பித்து, மதுரை மேற்கு, திருமங்கலம், இளையாங்குடி, பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், ஸ்ரீவைகுண்டம், வந்தவாசி, திருச் செந்தூர் என 10 இடைத்தேர்தலில் தி.மு.க.,வும் மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும் அமோக வெற்றி பெற்றன.பத்து தொகுதிகளில், மதுரை மேற்கு மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நின்று வெற்றி பெற்றனர். மற்ற எட்டு தொகுதிகளிலும் தி.மு.க., போட்டியிட்டு வெற்றி பெற்றது.
இந்நிலையில், பென்னாகரம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., பெரியண்ணன் திடீர் மறைவால், அத்தொகுதிக்கு கடந்த 27ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.மற்ற இடைத்தேர்தலைப் போல் அல்லாமல், இந்த இடைத்தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி, லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து, மீண்டும் அங்கிருந்து வெளியேறிய பா.ம.க., பென்னாகரம் தொகுதியில் தனித்து களம் இறங்கியதும், பல இடைத்தேர்தல்களை புறக்கணித்த அ.தி.மு.க., பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டதும் தான் பரபரப்புக்கு காரணம்.மூன்று கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தையும், பொருட்களையும் வாரி இறைத்தன. நான்காவதாக, தே.மு.தி.க.,வும் போட்டியில் இருந்தது. முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், ஜெயலலிதா, ராமதாஸ் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், எதிர்பார்த்தது போல் தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரன் 77 ஆயிரத்து 669 ஓட்டுகள் பெற்று, 36 ஆயிரத்து 384 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.பா.ம.க., வேட்பாளர் தமிழ்குமரன், அ.தி.மு.க.,வை பின்னுக்குத் தள்ளி 41 ஆயிரத்து 285 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அ.தி.மு.க.,வுக்கு 26 ஆயிரத்து 787 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும், 'டிபாசிட்'டை இழந்தன. தே.மு.தி.க.,விற்கு 11 ஆயிரத்து 406 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.
பென்னாகரம் இடைத்தேர்தல் '49-ஓ' பயன்படுத்தியது 10 பேர் : பென்னாகரம் தேர்தலில், வெறும் 10 பேர் மட்டுமே, '49-ஓ' பிரிவை பயன்படுத்தியுள்ளனர்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:இடைத்தேர்தல் நடந்த பென்னாகரம் தொகுதியில், மொத்தம் 84.95 சதவீத ஓட்டுகள் பதிவாயின. அதிகபட்சமாக, எரிமலை ஓட்டுச்சாவடியில் 93.08 சதவீத ஓட்டுகள் பதிவாயின. ஒட்டு மொத்த ஓட்டு சதவீதத்துடன் ஒப்பிடும் போது, 18 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு 5 சதவீதம் அதிகரித்துள்ளது. மூன்று ஓட்டுச்சாவடிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவாக, 74.95 சதவீதம் என்ற அளவில் ஓட்டுகள் பதிவாகியுள்ளன.மூங்கில் மடுவு ஓட்டுச்சாவடியில், குறைந்தபட்சமாக 70.90 சதவீத ஓட்டுகள் பதிவாகின. 10 வாக்காளர்கள் மட்டும், '49-ஓ' பிரிவைப் பயன்படுத்தி, யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என பதிவு செய்தனர். ஓட்டு எண்ணிக்கை, காலை 8 மணிக்குத் துவங்கி 4 மணிக்கு முடிந்தது. மொத்தம் 18 சுற்றுகளாக, ஒவ்வொரு சுற்றிலும் 14 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு ஓட்டுகள் எண்ணப்பட்டன.இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
பென்னாகரம் முடிவு: அ.தி.மு.க., அதிர்ச்சி : பென்னாகரம் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு வெளிவரத் துவங்கியது. முதல் சுற்று, இரண்டாம் சுற்றுகளில் அ.தி.மு.க., இரண்டாம் இடத்தில் இருந்தது. அதன்பின் அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.அதன் பின் எண்ணப்பட்ட சுற்றுகளில் பா.ம.க., இரண்டாம் இடத்தை தக்க வைத்தது. ஓட்டு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதும் சென்னை மாவட்ட அ.தி.மு.க.,வினர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரவில்லை. அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்திற்கும் கட்சியினர் எட்டிப்பார்க்கவில்லை. நேற்று முழுவதும் ஜெயலலிதாவின் வீடு மற்றும் கட்சியின் தலைமை அலுவலகமும் வெறிச்சோடி கிடந்தன. எம்.ஜி.ஆர்., காலத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஓசூர், கிள்ளியூர் ஆகிய இரு தொகுதிகளில் டிபாசிட்டை அ.தி.மு.க., இழந்துள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின், நடந்த 1996, 2006ம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் மட்டும் அக்கட்சி டிபாசிட் இழந்துள்ளது.இடைத்தேர்தலில் முதல்முறையாக பென்னாகரம் தொகுதியில் அ.தி.மு.க., டிபாசிட் இழந்ததால் ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்தார். அ.தி.மு.க.,விற்கு அடி விழும் வகையில் அக்கட்சியின் தேர்தல் முடிவு அமைந்துள்ளது. அ.தி.மு.க.,விற்கு செல்வாக்குள்ள தொகுதியான பென்னாகரத்தில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது அக்கட்சியின் தொண்டர்களாலும் ஜீரணிக்க முடியவில்லை.






