சாதித்து காட்டியது சச்சின் அணி:பைனலில் சூப்பராக நுழைந்தது
மும்பை : ஐ.பி.எல்., தொடரின் பைன லுக்கு சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பரபரப்பான அரையிறுதி போட்டியில் கும்ளேவின் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 35 ரன்கள் வித்தி யாசத்தில் வீழ்த்தியது. கடந்த முறை பைனலுக்கு தகுதி பெற்ற பெங்களூரு அணி, இம்முறை அரையிறுதியுடன் வெளி யேறியது. மும்பை அணியை பொறுத்தவரை ஐ.பி.எல்., வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்கு தகுதி பெற்று சாதித்தது.
இந்தியாவில் மூன்றாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று நவி மும்பையில் நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் மும்பை, பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் சச்சின், பேட்டிங் தேர்வு செய்தார்.
சச்சின் ஏமாற்றம்: மும்பை அணி திணறல் துவக்கம் கண்டது. முதல் ஓவரில் பிரவீண் குமார் 2 ரன் மட்டுமே கொடுத்தார். ஸ்டைன் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரி விளாசிய சச்சின், 5வது பந்தை தாழ்வாக பறக்க விட்டார். இதனை ரோஸ் டெய்லர் 'சூப்பராக' பிடிக்க, 9 ரன்களுக்கு அவுட்டானார். இத்தொடரில் ரன் மழை பொழிந்த சச்சின், முதல் முறையாக ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். சிறிது நேரத்தில் ஷிகர் தவான்(12) ரன் அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. இதற்கு பின் அபிஷேக் நாயர், அம்பதி ராயுடு இணைந்து விவேகமாக ஆடினர். பிரவீண் குமார் வீசிய போட்டியின் 5வது ஓவரில், இருவரும் சேர்ந்து 3 பவுண்டரி அடித்தனர். நாயர் 22 ரன்களுக்கு நடையை கட்டினார். கும்ளே சுழலில் டுமினி(3) வீழ்ந்தார்.
திவாரி அரைசதம்: கடைசி கட்டத்தில் சவுரப் திவாரி அதிரடியாக ரன் சேர்த்தார். விராத் கோஹ்லி பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த இவர், காலிஸ் வீசிய 16வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். பின் கும்ளே சுழலில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க... ஸ்கோர் மிக வேகமாக உயர்ந்தது. ராயுடு 40 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த போலார்டும் தன் பங்குக்கு அதிரடி காட்டினார். வினய் குமார் வீசிய 19வது ஓவரில் 2 இமாலய சிக்சர் அடித்தார். கடைசி 5 ஓவரில் 77 ரன்கள் எடுக்கப்பட, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. அரைசதம் கடந்த திவாரி 52(3 பவுண்டரி, 4 சிக்சர்), போலார்டு 33(1 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்களுடன் அவுட்டா காமல் இருந்தனர்.
விக்கெட் மடமட: சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணி ஆரம்பத்தில் ஆட்டம் கண்டது. தூணாக நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட காலிஸ்(11), மலிங்கா வேகத்தில் காலி யானார். ஹர்பஜன் வலையில் பீட்டர்சன்(19) சிக்கினார். போலார்டு வீசிய 10வது ஓவரில் இரட்டை அடி விழுந்தது. 3வது பந்தில் உத்தப்பா(26) அவுட்டா னார். 4வது பந்தில் டிராவிட் (23)அநியாயமாக ரன் அவுட்டா னார். பின் போலார்டு வேகத்தில் விராத் கோஹ்லி(9), மனிஷ் பாண்டே(5) வெளியேறினர். பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. அசத்தல் வெற்றி பெற்ற மும்பை அணி, ஐ.பி.எல்., வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது. ஆட்டநாயகன் விருதை போலார்டு வென்றார்.
'கேட்ச்' சர்ச்சை : நேற்று மும்பை கேப்டன் சச்சின் பிடித்த 'கேட்ச்' தொடர்பாக சர்ச்சை எழுந்தது. ஜாகிர் கான் வீசிய பந்தை பெங்களூரு அணியின் டிராவிட் அடித்தார். அதனை முதல் 'ஸ்லிப்' திசையில் நின்ற சச்சின் மிகவும் தாழ்வாக பிடித்து 'அவுட்' கோரினார். ஆனால், பந்து தரையில் பட்டதாக கூறி, டிராவிட் வெளியேற மறுத் தார். இதையடுத்து 3வது அம்பயரிடம் கேட்கப் பட்டது. 'ரீப்ளேயில்' பந்து லேசாக தரையில் பட்டது தெரிய வர, 'அவுட்' மறுக்கப் பட்டது.
சச்சின் காயம்: இதனால், வலது கை விரல்களில் ரத்தம் வழிய சச்சின் பிடித்த 'கேட்ச்' வீணானது. பின் காயம் அடைந்த இவரது விரல்களில் 5 தையல் போடப்பட்டது. இது மும்பை அணிக்கு பைனலில் சிக்கலை ஏற்படுத்தலாம்.






