ஐ.பி.எல்., இறுதிப்போட்டியில் மும்பை-சென்னை : சூப்பராக நுழைந்தது சூப்பர் கிங்ஸ்
மும்பை : மூன்றாவது ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு சூப்பராக நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இன்று நவி மும்பையில் நடந்த 2வது அரையிறுதி போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை, 38 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. ஏப். 25ம் தேதி மும்பையில் நடக்கும் இறுதிப்போட்டியில் மும்பையை சென்னை அணி எதிர்கொள்கிறது. மூன்றாவது ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இத்தொடரில் மும்பை அணி, தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நவி மும்பையில் நடந்த 2வது அரையிறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். துவக்க ஆட்டக்காரர்களாக ஹைடனும், முரளி விஜயும் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 12 ஆக இருந்த போது ஹைடன் 8 ரன்களுக்கு ஹாரிஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். சிறிது நேரம் அதிரடி காட்டிய முரளி விஜயும் 1 சிக்சர் மற்றும் 1 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அணியை கரைசேர்ப்பார் என கருதப்பட்ட ரெய்னாவும் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப சென்னை அணி தட்டுத்தடுமாறியது. இந்நிலையில், பத்ரி நாத்துடன் ஜோடி சேர்ந்த தோனி, நிலைமையை உணர்ந்து விளையாடினார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்தது. பத்ரிநாத் 37 ரன்களும், தோனி 30 ரன்களும் எடுத்தனர். மோர்க்கல் 4 ரன்களுக்கு நடையை கட்ட, இறுதியில் அனிருத் எடுத்த 24 ரன்கள் அணி, கவுரவமான ஸ்கோர் எடுக்க உதவியது. இறுதியில் சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை எடுத்தது. டெக்கான் சார்பில் ஹாரிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 'நடப்பு சாம்பியன்' டெக்கான் சார்ஜர்ஸ் களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக கில் கிறிஸ்டும், கிப்சும் களமிறங்கினர். அந்த அணியின் ஸ்கோர் 19 ஆக இருந்த போது, கில்கிறிஸ்ட் பொலிங்கர் பந்துவீச்சில் அவுட்டானார். தொடர்ந்து வந்த சுமன், ரோகித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி 23 ரன்களை எடுத்தார். இறுதியில், டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இவ்வெற்றியின் மூலம் கோப்பையை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில், மும்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.






