திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் சட்ட ரீதியில் தண்டிக்கத்தக்கதா?
புதுடில்லி : 'திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் சட்டப்படி குற்றமல்ல. பொதுமக்கள் விரும்பாத ஒரு கருத்தை தெரிவித்ததற்காக, தனி நபர் ஒருவரை கிரிமினல் சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த நடிகை குஷ்புவுக்கு எதிராக 22க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை எல்லாம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: திருமணத்திற்கு பின்னரே செக்ஸ் உறவுகளை தொடர வேண்டும் என்பது நமது சமூகத்தின் கருத்து. அதை மீறி, வயதிற்கு வந்த ஒருவர் திருமணத்திற்கு முன், செக்ஸ் உறவுகளில் ஈடுபட்டால், அது சட்டப்படி குற்றமாகாது. பொதுமக்கள் விரும் பாத ஒரு கருத்தை தெரிவித்ததற்காக, தனி நபர் ஒருவரை கிரிமினல் சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது. ஒருவர் சட்டப்படி குற்றம் செய்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களை காண்பித்தால் மட்டுமே, அவரை தண்டிக்க முடியும். தவறான உறவு என்பது குறித்து இந்திய தண்டனை சட்டம் பிரிவு 497 ல் குறிப்பிடப்பட்ட ஷரத்துக்கள் தரும் விளக்கம் வித்தியாசமானது. தவறான, பொய்யான புகார்களுக்காக ஒருவர் மீது கிரிமினல் வழக்கு தொடரக் கூடாது. அப்படி செய்வது அவரை சித்திரவதை செய்வது மற்றும் அவமானப்படுத்துவதற்கு சமம்.
குஷ்புவுக்கு எதிராக பா.ம.க.,வினர் சிலரால் வேண்டும் என்றே, கெட்ட நோக்கத்துடன் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கிரிமினல் சட்ட இயந்திரம் இப்படி முறைகேடாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க, குஷ்புவுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்வதே சரியாக இருக்கும். ஐ.பி.சி சட்டத்தின் 499 வது பிரிவின்படி குஷ்பு அவதூறாக பேசியதாக கணக்கிட முடியாது. நடிகை குஷ்பு, பொதுவான ஒரு கருத்தையே தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ஒருவரையோ அல்லது ஒரு ஜோடியையோ அல்லது அமைப்பையோ அல்லது சில நபர்களைக் குறிப்பிட்டோ அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்தக் கருத்தை தெரிவித்ததற்காக, அவருக்கு எதிராக யாரும் அவதூறு வழக்கு தொடரவில்லை. ஒழுக்க பண்பும், குற்றச் செயலும் ஒன்றிணைந்து நீடிக்க முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில், திருமணத்திற்கு முந்தைய செக்ஸ், சமூக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தா என்ற கேள்வியே எழவில்லை. அதற்கு மாறாக குஷ்புவின் கருத்தை எதிர்த்தே வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.







[...] This post was mentioned on Twitter by Tamil News. Tamil News said: New Blog post திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் சட்ட ரீதியில் தண்டிக்கத்தக்கதா? http://bit.ly/bWYXtP … [...]