பாகனின் கட்டுப்பாட்டை மீறியது இந்திரா குழித்துறையில் ஒரு மணி நேரம் பரபரப்பு
மார்த்தாண்டம்:நெல்லை, குழித்துறையில் பாகனின் கட்டுப்பாட்டை மீறி தனியார் யானை ஒன்று, தாமிரபரணி ஆற்றில் சுதந்திரமாக நீச்சலடித்து உற்சாக குளியல் போட்டது. இதனால் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.திற்பரப்பை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான யானை இந்திரா. நெய்யாற்றின்கரையை சேர்ந்த குமார் கடந்த 10 ஆண்டுகளாக இந்த யானைக்கு பாகனாக உள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சூரியகோடு கோவில் திருவிழாவில் இந்த யானை பங்கேற்றுள்ளது.திற்பரப்பு கொண்டு செல்லும் வழியில், குழித்துறையில் இந்த யானை கட்டப்பட்டது. பாகன் குமார் யானையை குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சப்பாத்தின் கீழ் பகுதியில் குளிப்பாட்டுவதற்கு, நேற்று காலை கொண்டு வந்தார். நீண்ட நாட்களுக்கு பின் தற்போது ஆற்றில் தண்ணீர் சிறிது அதிகமாக ஓடியது.ஆற்றுக்குள் இறங்கிய யானை பாகனின் கட்டுபாட்டை மீறியது.
பாகன் பலமுறை யானையை நிற்குமாறு கூறியும், யானை கண்டுகொள்ளாமல் சுதந்திரமாக குளியல் போட்ட வண்ணம் ஆற்றுக்குள் அங்கும் இங்குமாக ஓடியது. பின் ஆற்றின் மறுகரைக்கு வந்தது.பாகன் சப்பாத் வழியாக மறுபக்கம் ஓடி வந்தார். உடனே யானை ஆற்றின் உட்பகுதி வழியாக மறுகரைக்கு ஓடியது. சுமார் ஒரு மணி நேரம் யானை ஆற்றினுள் இங்கும், அங்குமாக ஓடியது. அப்போது யானைக்கு மதம் பிடித்து விட்டது என்று கருதி பொதுமக்கள் பரபரப்பு அடைந்தனர்.
ஆனால் யானைக்கு மதம் பிடிக்கவில்லை.ஒரு மணி நேரத்திற்கு பின், யானை ஆற்றின் உட்பகுதியில் தாழ்வான இடத்திற்கு சென்றது.பாகன் உடனடியாக, யானையின் மீது ஏறி யானையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். யானை தனக்கே உரிய பாணியில் வீறுநடை போட்டு சென்றது. இதனால் பரபரப்பு அடங்கியது.







[...] This post was mentioned on Twitter by Tamil News. Tamil News said: New Blog post பாகனின் கட்டுப்பாட்டை மீறியது இந்திரா குழித்துறையில் ஒரு மணி நேரம் பரபரப்பு http://bit.ly/9XjEGY … [...]