மதுரை காமராஜ் பல்கலை சார்பில் கல்வி செயற்கைக்கோள் ஏவ முடிவு துணைவேந்தர் தகவல்
நாகமலை புதுக்கோட்டை:''மதுரை காமராஜ் பல்கலை சார்பில், விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து கல்வி செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது,'' என துணைவேந்தர் கற்பககுமாரவேல் பேசினார்.மதுரை காமராஜ் பல்கலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி பேராசிரியர்களுக்கு பணிமுன் பயிற்சி அளிக்கப் பட்டது.
பயிற்சி நிறைவு நாளான நேற்று தமிழக அரசின் உயர்கல்வித் துறை மாநில குழு உறுப்பினர் செயலர் எஸ்.பாஸ்கரன் பேசியதாவது:பல்கலையில் 89 ஆசிரியர்கள் நியமனத்தின் போது, பல பிரச்னைகள் வந்தன. அவற்றை களைந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவி பேராசிரியர்களான நீங்கள் 25 முதல் 30 ஆண்டுகள் வரை பணியாற்ற வாய்ப்புள்ளது.
இக்கால கட்டத்தில் உங்களை நீங்கள் முழுமையாக பல்கலைக்குஒப்படைக்க வேண்டும். உங்களிடம் இரு விஷயங்கள் எதிர் பார்க்கப்படுகின்றன. மாணவர்கள் வகுப்பறைக்கு வரும் வகையில் பாடங்களை நடத்த வேண்டும். அடுத்து பாடத்திட்டத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதே அது. ஓராண்டில் இருமுறையாவது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆயிரம் ரூபாய்க்காவது துறை தொடர்பான புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். உயர்ந்த எண்ணம் உள்ளவராகவும், நிறைந்த மனதுடனும், பாகுபாடின்றி, கல்வி மேன்மை பொருந்தியவராக திகழ வேண்டும்,'' என்றார்.
தலைமை வகித்த துணைவேந்தர் கற்பககுமாரவேல் பேசியதாவது:மதுரை காமராஜ் பல்கலையானது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் சேர்ந்து மூன்று கோடி ரூபாய் செலவில், கல்விக்கான செயற்கை கோள் ஒன்றை அனுப்ப உள்ளது. இதற்காக பணியாற்ற ஒரு கமிட்டி அமைக்கப்பட உள்ளது. பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் 11 பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தொலை நிலைக் கல்வியில் 23 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
சில ஆண்டுகளில் பேராசிரியர்கள் சிலர் ஓய்வு பெற உள்ளனர். அந்த பணியிடங்களில் நேரடியாக பேராசிரியர்கள், வேறு பல்கலைகளில் இருந்தும் கூட நியமிக்கப்பட உள்ளனர். இப்பல்கலையில் பசுமை புரட்சிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. நிர்வாக பணியாளர் மேம்பாட்டு கல்லூரிக்கு பத்துலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. பல்கலை யின் எதிர்கால மேம்பாட்டுக்கான கொள்கையை வகுக்க வல்லுனர் குழுநியமிக்கப்பட உள்ளது,'' என்றார்.







[...] This post was mentioned on Twitter by Tamil News. Tamil News said: New Blog post மதுரை காமராஜ் பல்கலை சார்பில் கல்வி செயற்கைக்கோள் ஏவ முடிவு துணைவேந்தர் தகவல் http://bit.ly/c06OAx … [...]