ரவுடிகள் அட்டகாசம் செய்தால் இனி, டுமீல், டுமீல் தான்
சாத்தூர் : சாத்தூர் அருகே கோவில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரர் நாகரத்தினத்தை, கடந்த 27ம் தேதி வெட்டிக் கொன்ற ரவுடி குமார், நேற்று காலை, 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டார். சக ரவுடிகளைப் 'போட்டுத் தள்ளிய' ரவுடிகள், தற்போது காவல் துறை மீதும் கை வைத்து விட்டதால், பொங்கி எழுந்துள்ள போலீசார், ரவுடித்தனத்தில் ஈடுபடுவோருக்கு இதே கதி தான் என்று, இந்த, 'டுமீல்' மூலம் பாடம் கற்பித்துள்ளனர்.
விருதுநகர், சாத்தூர் அருகிலுள்ள ஒ.மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு, தாலுகா போலீஸ்காரர் நாகரத்தினம்(38), சக போலீஸ்காரர் ஒருவருடன் சென்றிருந்தார். அதே ஊரைச் சேர்ந்த ரவுடி குமார் என்பவரை ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் தேடி வந்தனர். போலீசார் மீது ஆத்திரமடைந்த குமார் குடிபோதையில், நாகரத்தினத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். 'என்கவுன்டர்: அவரை சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், டி.எஸ்.பி.,க் கள் தலைமையில் 10 தனிப்படை போலீசார், படந்தால், இரவார்பட்டி, சல்வார்பட்டி, பனையடிபட்டி கிராமங்களில் தேடி வந்தனர். சாத்தூர் - கோவில்பட்டி சாலையில், நூற்பாலை தொழிலாளர் குடியிருப்பு அருகிலுள்ள கருவேலங்காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த குமாரை, நேற்று காலையில் போலீசார், 'என்கவுன்டரில்' சுட்டு கொன்றனர்.
இதுகுறித்து ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: குமாரை பிடிக்க, 300 போலீசார் ஈடுபடுத்தப் பட்டனர். சாத்தூர் - கோவில்பட்டி ரோட்டில் உள்ள நூற்பாலை தொழிலாளர் குடியிருப்பு அருகே புதருக்குள், குமார் பதுங்கியிருப்பதாக சாத்தூர் எஸ்.ஐ., சந்திரன் நேற்று தகவல் கொடுத்தார். அந்த இடத்தை ஏ.டி.எஸ்.பி., மகேந்திரன், சிவகாசி டி.எஸ்.பி., ராஜகோபால் தலைமையில் அதிரடிப் படை, ஆயுதப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். காலை 7 மணியளவில் குமார், புதர் மறைவில் இருந்து அரிவாளுடன் போலீசார் மீது பாய்ந்து தாக்க முயன்றார். ஆக்ரோஷமாக இருந்த அவர் மீது, விருதுநகர் ஆயுத படை போலீஸ்காரர் செல்வக் குமார்(28) துப்பாக்கியால் இரண்டு ரவுண்டுகள் சுட்டார். படுகாயமடைந்த அவரை, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு வந்தனர்; வழியிலேயே அவர் இறந்துவிட்டார்,'' என்றார். தமிழகத்தில், ரவுடிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து, போலீசார் தீவிரமாக ஆலோசித்து வந்த நேரத்தில், ஒரு போலீசையே வெட்டிகொன்ற ரவுடி மூலம், மற்ற அட்டகாச ரவுடிகளுக்குப் பாடம் புகட்ட, போலீசார் துணிந்து விட்டனர். இனி, வெறிச் செயலில் ஈடுபடும் ரவுடிகளுக்கு இது தான் கதி என்பதை போலீசார் உணர்த்தியுள்ளனர்.
மனைவி தற்கொலை: குமார் மீது 2009 முதல் ஏப்., 26 வரை வழிப்பறி, கொள்ளை, கொலை மிரட்டல், அடிதடி உட்பட எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையானவர். இவரது மனைவி சோலையம்மாள்(23), ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. குமாரின் நடவடிக்கையால் மனமுடைந்த சோலையம்மாள், ஏப்., 26ல் விஷம் குடித்தார். கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று காலை 6 மணியளவில் இறந்தார். பிரேத பரிசோதனைக்கு பின், குமாரின் உடலை ஒ.மேட்டுப்பட்டிக்கு கொண்டு செல்ல அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சாத்தூரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
நான்கு ஆண்டில் 29 என்கவுன்டர்: தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில் இதுவரை 25 சம்பவங்களில் 29 ரவுடிகள், 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல் லப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 2006 மே 13ம் தேதி தி.மு.க., ஆட் சிக்கு வந்தது. மக்களை அச் சுறுத்தும் வகையில், வாலாட்டும் ரவுடிகளைக் கட்டுப்படுத்தும் வகையில், 'என்கவுன்டர்கள்' ஆயுதமும் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் இதுவரை 25 சம்பவங்களில், 29 பேர், 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2006 மே 29ல் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜன், ஜூன் 7ல் சென்னையைச் சேர்ந்த நாகூர் மீரான், ஆகஸ்ட் 12ல் சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார், அக்., 22ல் திருச்சியைச் சேர்ந்த முட் டை ரவி, நவ., 18ல் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், டிச., 12ல் சென்னையில் வாலாட்டிய பங்க் குமாரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 2007 ஜன., 13ல் மதுரை மாரிமுத்து, பிப்., 5ல் நாகை பிரபல ரவுடி மணல்மேடு சங்கர், ஆக., 1ல் சென்னையில் வெள்ளை ரவி, குணா இருவரும், 'என்கவுன்டரில்' போட்டுத் தள்ளப்பட்டனர். கடந்த 2008 பிப்., 3ல் தஞ்சாவூரில் மிதுன்சக்கரவர்த்தி, ஏப்., 11ல் தூத்துக்குடியில் ஜெயக்குமார், சுடலைமணி, ஏப்., 19ல் கொடைக்கானலில் நவீன்பிரசாத், ஏப்., 28ல் தஞ்சாவூரைச் சேர்ந்த பாம் பாலாஜி, ஜூலை 11ல் சென்னை காசிமேடைச் சேர்ந்த பிரபல ரவுடி பாபா சுரேஷ், நவ., 16ல் சேலம் கோபியும் என்கவுன்டரில் பலியாயினர். கடந்த ஆண்டு ஜன., 19ல் திண்டுக்கல் தெய்வேந் திரன், பிப்., 6ல் சிவகங்கை சண்முகம், ஜூலை 9ல் சென்னை தனசேகர், ஜூன் 29ல் விருதுநகரில் சுந்தரமூர்த்தி, அக்., 2ல் நாகையில் வாலாட்டி வந்த குரங்கு செந்திலும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு ஜன., 18ல் விழுப்புரத்தில் அசோக்குமார், பிப்., 8ல் சென்னையில் பாண்டியன், வேலு, பிப்., 16ல் மதுரையில் கவியரசு, கல்லுமண்டையன், மார்ச் 26ல் காஞ்சிபுரத்தில் நடராஜனும், 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப் பட்டனர். விருதுநகரில் போலீஸ் காரரைக் வெட்டிக் கொன்ற பிரபல ரவுடி குமாரை போலீசார், 'என்கவுன்டரில்' சுட்டுத் தள்ளினர். நான்கு மாதத்தில் மட்டும் ஏழு பேர் உட்பட நான்கு ஆண்டுகளில் மொத்தம் 29 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.







[...] This post was mentioned on Twitter by Tamil News. Tamil News said: New Blog post ரவுடிகள் அட்டகாசம் செய்தால் இனி, டுமீல், டுமீல் தான் http://bit.ly/cFsnLr … [...]