ரோகித் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
புலவாயோ: முத்தரப்பு லீக் போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் சதம் விளாச, இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய இலங்கை அணி பரிதாபமாக வீழ்ந்தது
ஜிம்பாப்வேயில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் சுரேஷ் ரெய்னா, "பீல்டிங்' தேர்வு செய்தார்.
தில்ஷன் அரைசதம்:
இலங்கை அணிக்கு துவக்கத்தில் திணறியது. தரங்கா(1) ரன் அவுட்டானார். ஓஜா சுழலில் சமரவீரா (19) சிக்கினார். பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் தில்ஷன், ஜடேஜாவின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து அசத்தினார். இவர் 61 ரன்கள் எடுத்தார்.
கைகொடுத்த மாத்யூஸ்:
பின் மாத்யூஸ், கபுகேதரா இணைந்து மந்தமாக விளையாட, அணியின் "ரன்ரேட்' மோசமானது. நீண்டநேரம் தாக்குப்பிடித்த கபுகேதரா (20), சமர சில்வா (5) ஆகிய இருவரையும், ரவிந்திர ஜடேஜா வெளியேற்றினார். உறுதியான ஆட்டத்தை தொடர்ந்த மாத்யூஸ், சர்வதேச அரங்கில் 4வது அரைசதம் கடந்தார். இவர் 75 ரன்கள் எடுத்த நிலையில், யாதவ் வேகத்தில் போல்டானார்.
அதிரடி ரன்குவிப்பு:
கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பெரேரா 32 ரன்கள் எடுத்தார். "டெயிலெண்டர்களும்' ஏமாற்ற, இலங்கை அணி 49.5 ஓவரில் 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது.
மீண்டும் சொதப்பல்:
எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, தினேஷ் கார்த்திக்-முரளி விஜய் ஜோடி மீண்டும் சொதப்பலான துவக்கம் கொடுத்தது. முரளி விஜய் 14 ரன் எடுத்த நிலையில், அம்பயரின் தவறான தீர்ப்பில் வெளியேறினார். மெண்டிஸ் சுழலில் தினேஷ் கார்த்திக் (18) அவுட்டானார். "சூப்பர்' ஜோடி:
பின் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் ஒன்று, இரண்டு ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். சர்வதேச அரங்கில் விராத் கோஹ்லி 7வது அரைசதம் அடித்தார்.
ரோகித் சதம்:
இந்த ஜோடியை பிரிக்க, தில்ஷன் எவ்வளவோ முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்த நிலையில், விராத் கோஹ்லி (82) அவுட்டானார். அடுத்து வந்த ரெய்னா, நல்ல "கம்பெனி' கொடுக்க, ரோகித் சர்மா தனது இரண்டாவது சதத்தை எட்டினார். இத்தொடரில் ஏற்கனவே ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் சதம் கடந்த இவர் மீண்டும் அசத்தினார்.
இந்திய அணி 43.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 101, ரெய்னா 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம், இந்தியாவுக்கு 4 புள்ளிகள் கிடைத்தது. முத்தரப்பு தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் நாளை இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
ஸ்கோர் போர்டு
இலங்கை
தரங்கா-ரன் அவுட்(கோஹ்லி/கார்த்திக்) 1(2)
தில்ஷன்-ரன் அவுட்(ரோகித்/மிஸ்ரா) 61(84)
சமரவீரா(ஸ்டம்டு)கார்த்திக்(ப)ஓஜா 19(24)
மாத்யூஸ்(ப)யாதவ் 75(95)
கபுகேதரா(ப)முரளி விஜய்(ப)ஜடேஜா 20(48)
கமர சில்வா-எல்.பி.டபிள்யு.,(ப)ஜடேஜா 5(5)
பெரேரா(கே)ரெய்னா(ப)ஓஜா 32(23)
குலசேகரா(ப)டிண்டா 19(14)
ரந்திவ்-ரன் அவுட்(டிண்டா) 1(2)
பெர்னாண்டோ-அவுட் இல்லை- 0(0)
மெண்டிஸ்(ப)டிண்டா 2(2)
உதிரிகள் 7
மொத்தம் (49.5 ஓவரில் ஆல் அவுட்) 242
விக்கெட் வீழ்ச்சி: 1-8(தரங்கா), 2-39(சமரவீரா), 3-97(தில்ஷன்), 4-150(கபுகேதரா), 5-156(கமர சில்வா), 6-204(பெரேரா), 7-226(மாத்யூஸ்), 8-239(ரந்திவ்), 9-240(குலசேகரா), 10-242(மெண்டிஸ்).
பந்து வீச்சு: யாதவ் 10-1-61-1, டிண்டா 9.5-0-44-2, ஓஜா 10-0-44-2, அமித் மிஸ்ரா 10-0-40-0, ஜடேஜா 10-0-49-2.
இந்தியா
கார்த்திக்(கே)சப்-ஜீவன்(ப)மெண்டிஸ் 18(26)
முரளிவிஜய்-எல்.பி.டபிள்யு.,(ப)குலசேகரா 14(20)
கோஹ்லி(கே)பெர்னாண்டோ(ப)ரந்திவ் 82(92)
ரோகித்-அவுட் இல்லை- 101(100)
ரெய்னா-அவுட் இல்லை- 24(23)
உதிரிகள் 4
மொத்தம் (43.3 ஓவரில் 3 விக்.,) 243
விக்கெட் வீழ்ச்சி: 1-28(முரளி விஜய்), 2-47(கார்த்திக்), 3-201(கோஹ்லி).
பந்து வீச்சு: குலசேகரா 9-1-34-1, பெர்னாண்டோ 8.3-0-58-0, மெண்டிஸ் 10-0-64-1, ரந்திவ் 9-0-51-1, பெரேரா 7-0-35-0.
விஜய்க்கு சோதனை
இந்திய வீரர் முரளி விஜய்க்கு, நேற்று அம்பயர் வடிவத்தில் சோதனை வந்தது. குலசேகராவின் பந்தை இவர் எதிர்கொண்ட போது, முதலில் "பேட்டில்' பட்டு, பின் "பேடில்' பட்டது. ஆனால் அம்பயர் ஜெர்லின் (தென் ஆப்பிரிக்கா) உடனடியாக எல்.பி.டபிள்யு., கொடுத்து வெளியேற்றினார். "டிவி' ரீப்ளேயில் பார்த்த போது அம்பயரின் தவறு தெளிவாகத் தெரிந்தது.
வினய் குமார் காயம்
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமாரின் முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக நாடு திரும்புகிறார். இவருக்குப் பதில் கர்நாடகாவின் மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் (20), ஜிம்பாப்வே செல்கிறார்.
"பவர் பிளே' குழப்பம்
நேற்று ரெய்னாவின் தவறால் இலங்கை அணிக்கு கூடுதலாக ஒரு "பவர் பிளே' கிடைத்தது. இவர், 11வது ஓவரில் "பவுலிங் பவர் பிளே' எடுப்பதாக அம்பயரிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், எதுவும் சொல்லாமல், "பவர் பிளே' பாணியில் பீல்டர்களை நிறுத்தினார். 16வது ஓவரில் "பவர் பிளே' முடிந்து விட்டது என நினைத்து பீல்டர்களை மாற்றி நிறுத்தினார். பின் தவறை உணர்ந்து, அம்பயரிடம் தெரிவித்துவிட்டு, 18 முதல் 22வது ஓவர் வரை "பவுலிங் பவர்பிளேயை' மீண்டும் எடுத்தார்.
புள்ளிப்பட்டியல்
அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி ரன்ரேட்
ஜிம்பாப்வே 1 1 0 4 +0.279
இந்தியா 2 1 1 4 +0.247
இலங்கை 1 0 1 0 -0.746
* ஒவ்வொரு வெற்றிக்கும் 4 புள்ளிகள் வழங்கப்படும்.






