சுவிஸ்வங்கிகள் வரிவிதிக்க புதிய திட்டம் : பட்டியல் வெளியிட மறுப்பு
புதுடில்லி : வரி ஏய்ப்பு செய்து பணம் போடுவோருக்கு பாதுகாப்பான சொர்க்கமாக உள்ள சுவிஸ் வங்கிகள், தங்கள் வங்கியில் சேமித்த வெளிநாட்டவர் பணத்திற்கு வரிவிதித்து அப்பணத்தை தர சுவிஸ் வங்கிகள் முடிவு செய்துள்ளன. அதே நேரத்தில், பணம் போட்டிருப்பவர்கள் பற்றிய விவரங்களை தரமாட்டோம் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளன.
இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள், தாங்கள் முறைகேடாகச் சேர்த்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்துள்ளனர். இதில், பல நாடுகளில் வரி ஏய்ப்பு செய்தவர்கள் பணமும் அடங்கும். இப்படி கறுப்பு பணத்தை முதலீடு செய்துள்ள, தங்கள் நாட்டவர்களின் பட்டியலை தர வேண்டும் என இந்தியா உட்பட பல நாடுகள் கோரி வருகின்றன. இக்கோரிக்கையில், அமெரிக்கா கணிசமான வெற்றி பெற்று பணத்தை திரும்பப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, தங்கள் நாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களின் பணத்திற்கு வரிவிதித்து அதைச் சம்பந்தப் பட்ட நாடுகளுக்குச் செலுத்த தயாராக இருப்பதாகவும், உடனடியாக அந்தப் பணம் சம்பந்தப் பட்ட நாடுகளுக்கு சென்று சேரும் என்றும் சுவிஸ் வங்கிகள் அறிவித்துள்ளன. அதே நேரத்தில், தங்கள் நாட்டு வங்கிகளில் கோடிக் கணக்கில் பணத்தை டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் உட்பட எந்த நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களையும் தர முடியாது என்றும் கூறியுள்ளன. அதே சமயத்தில் முறையாக வரி கட்டியபின், சேமிப்பில் அனுமதிக்கப்படவும் திட்டமிட்டிருக்கிறது.






