திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர் – ஊழியர் மோதல்
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று, அர்ச்சகர் - ஊழியரிடையே மோதல் ஏற்பட்டது. உடன், பணி பாதுகாப்புகோரி ஊழியர்கள் திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அதனால், பக்தர்கள் அவதிப்பட்டனர். திருச்செந்தூர் முருகன் கோவில் அலுவலக உதவியாளர் சங்கரன்(52). நேற்று காலை 6.45 மணியளவில் இவர், கோவிலுக்குள் பஞ்சலிங்க சன்னிதி நுழைவாயிலில் பணிபுரிந்தார். அங்கு ஐந்து பக்தர்களுடன் வந்த அர்ச்சகர் ராஜா (31), சன்னிதிக்குள் செல்ல முயன்றார். அவர்களை தடுத்த சங்கரன், சன்னிதிக்குள் செல்ல, ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமென கூறினார்.
அதில், சங்கரனுக்கும், ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டது. சங்கரனை, ராஜா தாக்கினார். அதைக்கேள்விப்பட்டு அங்கு வந்த கோவில் ஊழியர்கள் சிலர், ராஜாவை தாக்கினர். காயமேற்பட்டதாகக்கூறி இருவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதுபற்றி விசாரணை நடத்த வந்த டி.எஸ்.பி., நடராஜமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், கோவில் ஊழியர்கள் சிலரை ஜீப்பில் ஏற்றினர். அதற்கு மற்ற ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களை விடுவித்தனர்.
இந்நிலையில், பணியின்போது பாதுகாப்பு வேண்டுமென வலியுறுத்தி, கோவில் ஊழியர்கள் காலை 9.30க்கு ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சிறப்பு தரிசனம், வி.ஐ.பி., மற்றும் வி.வி.ஐ.பி., தரிசன டிக்கெட்டுகள், முடிகாணிக்கை மற்றும் பூஜைக்கான டிக்கெட்டுகளை தராமல் கவுன்டர்களை பூட்டிவிட்டு வெளியேறினர். கோவில் விடுதி ஊழியர்களும் ஸ்டிரைக்கில் பங்கேற்றனர். இதனால், சுவாமி தரிசனம் செய்யவும், நேர்த்திக்கடன் செலுத்தவும் வந்திருந்த பக்தர்கள் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், நடந்த சம்பவம் தொடர்பாக ஊழியர் - அர்ச்சகர் தரப்பினரிடையே இன்று சமாதான பேச்சுவார்த்தை நடைபெறுமென கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பகல் 11.30க்கு மணியளவில் ஊழியர்கள் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது. இந்த மோதல் தொடர்பாக ஊழியர் சங்கரன், அர்ச்சகர் ராஜா புகாரில் கோவில் போலீசார், தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.






