ஜெயம் ரவிக்கு ஆண் குழந்தை பிறந்தது!
ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். எடிட்டர் மோகனின் மகனும், டைரக்டர் ஜெயம் ராஜாவின் சகோதரனுமான ஜெயம் ரவிக்கும், சென்னையை சேர்ந்த ஆர்த்திக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இதையடுத்து ஆர்த்தி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆர்த்திக்கு நேற்று மாலை 4 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
ஆண் குழந்தை பிறந்த தகவல் அறிந்த ஜெயம் ரவி மிகுந்த சந்தோஷப்பட்டார். உடனடியாக ஆர்த்தியையும், குழந்தையையும் சென்று பார்த்தார். எடிட்டர் மோகன், ஜெயம் ராஜா ஆகியோரும் குழந்தையை பார்த்து மகிழ்ந்தனர். நண்பர்கள், உறவினர்களுக்கு போனில் தகவல் தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மருத்துவமனையில் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.






