மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க திட்டம்
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளத்தில் , சிமென்ட் தளத்தை அகற்றி, களிமண், மணலை நிரப்பி, நிரந்தரமாக தண்ணீர் தேக்கப்படவுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன், இக்குளத்தில் சிமென்ட் பூசப்பட்டு, ஆழ்குழாய்கள் மூலம் தண்ணீர் விடப்பட்டு, தொட்டியாக மாற்றப்பட்டது. தரைக்கு அடியில் தண்ணீர் ஊற வாய்ப்பில்லாமல் போனதாலும், கோயிலைச் சுற்றி பல நூறு அடிகளுக்கு ஆழ்குழாய் அமைத்ததாலும், கோயில் தூண்களில் விரிசல் ஏற்பட்டது. கும்பாபிஷேகத்தின் போது, இவை சரிசெய்யப்பட்டது.மேலும், தண்ணீர் தேங்கியிருப்பதால் பாசி படர்ந்து, குளத்தின் அழகையும் கெடுக்கிறது. இதை தவிர்க்க, சிமென்ட் தளத்தை அகற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னதாக, குளத்தின் நான்கு ஓரங்களில் உள்ள சிறிய தொட்டிகளை தூர்வாரி, களிமண், மணலை கொண்டு தண்ணீர் தேக்கி, பரிசோதிக்க முடிவு செய்துள்ளது.
கோயில் நிர்வாக அதிகாரி பத்மநாபன் கூறியதாவது : திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில், இம்முறையில் தண்ணீர் தேக்கும் திட்டம் வெற்றி பெற்றது. அதன் அடிப்படையில், இங்கும் செயல்படுத்த உள்ளோம். சிமென்ட் தளத்தை முற்றிலும் அகற்றிய பின் தண்ணீர் தேங்காவிட்டால், வீண் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டுதான், சிறிய தொட்டிகளில் பரிசோதிக்க முடிவு செய்துள்ளோம்.
கோயில் சார்பில் "பார்க்கிங்' : நாளை முதல் பத்ரகாளி அம்மன், துர்க்கை அம்மன் சன்னதிகளில் கோயில் நிர்வாகம் சார்பில் நெய் விற்பனை நடக்கும். இதற்காக ஆவினிலிருந்து நெய் வாங்க உள்ளோம். எழுகடல் தெருவில் காம்ப்ளக்ஸ் கடைகளுக்கு அருகில், காலியாக உள்ள கோயில் இடத்தில் டூவீலர் பார்க்கிங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளோம். நாளை முதல் நாள் ஒன்றுக்கு 5 ரூபாய் செலுத்தி டூவீலர் நிறுத்தலாம், என்றார்.






