இரவு முழுவதும் கழிப்பறையில்தவித்த குழந்தை: காலையில் மீட்பு
தேனி:தேனியிலுள்ள பள்ளி ஒன்றின் கழிப்பறையில், இரவு முழுவதும் தவித்த குழந்தையை காலையில் பொதுமக்கள் மீட்டனர். தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த கார்மேகத்தின் மகன் நவீன்குமார் (3). நேற்று மாலை 5.45 மணி வரை வீதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, பின் அருகில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் விளையாட சென்று விட்டது.
இப்பள்ளியில், உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.அங்குள்ள கழிப்பறைக்குள் குழந்தை சென்றதை கவனிக்காமல், பள்ளியின் மெயின் கேட்டை மூடிவிட்டு அனைவரும் சென்று விட்டனர். குழந்தையை காணாமல் தவித்த பெற்றோர், தேனி போலீசில் புகார் கொடுத்தனர். எஸ்.ஐ., மீனாட்சி வழக்கு பதிவு செய்தார்.இந்நிலையில், பள்ளி கழிப்பறைக்குள்ளேயே இரவில் குழந்தை தூங்கிவிட்டது. காலையில் அங்கிருந்து வெளியேறிய குழந்தை மூடப்பட்டிருந்த, மெயின் கேட் அருகே வந்து அழுது கொண்டிருந்தது. இதனை கவனித்த பொதுமக்கள் குழந்தையை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.






