ஜெயித்தது ஜெய்., தெலுங்கானா கோஷம்; டி.ஆர்.எஸ்.,- 11; பா.ஜ.,-1; காங்.,- 0
ஐதராபாத்: ஆந்திர மாநிலம் தெலுங்கானா பகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் சந்திரசேகரராவ் கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. அறிவிக்கப்பட்ட முடிவுகளில் தெலுங்கானா ராஷட்ரிய சமிதி கட்சி 11 இடங்களையும், பா.ஜ., 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு ஆணை பிறப்பித்து திரும்ப பெற்றது. இதனால் மாநிலத்தில் பெரும் கலவரம், வன்முறை வெடித்தது. இதில் காங்., தெலுங்குதேசம், தெலுங்கான ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.,க்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து தனது செல்வாக்கை தெலுங்கானா மக்கள் மத்தியில் உயர்த்திக்கொண்டார்.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி இந்த 12 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. வாக்காளர்களுக்கு உற்சாக பானம். கவர் கவனிப்பு, மற்றும் பிரியாணி என பல விதங்களில் கவர்ந்து இழுக்கப்பட்டனர். வீட்டுக்கு , வீடு யாருக்கும் தெரியாமல் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் பின் செய்து போடப்பட்டது. இந்த இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடந்தது .
தேர்தல் நடந்த தொகுதிகள் வருமாறு : சிர்புர், சென்னூர், மான்செரியல், நிஜாமாபாத், தர்மபுரி, வெமுலவாடா, சித்திபேட் , எல்லாரெட்டி, கோர்த்தலா, சிர்சில்லா, ஹூசுராபாத், வாரங்கல் (மேற்கு), ஆகிய 12 தொகுதிகள் அடங்கும். முதலில் முறையே 7 தொகுதிகளில் மின்னணு ஓட்டு இயந்திரம் மூலமும் ஏனைய 5 தொகுதிகளில் ஓட்டுச்சீட்டு முறையும் பின்பற்றப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும், ஆரம்பம் முதலே 11 தொகுதிகளில் தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி வேட்பாளர்கள் கூடுதல் ஓட்டுக்கள் பெற்று முன்னிலை வகித்து வந்தனர். தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி 11 இடங்களையும், பா.ஜ., ஒரு இடத்தையும் கைப்பற்றியிருக்கிறது. காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது.
இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆந்திர மாநில காங்., தலைவர் சீனிவாசன் தோல்வியுற்றுள்ளார். காங்கிரஸ், மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியினர் ஒரு இடத்தில் கூட முன்னேற முடியவில்லை. மொதத்தில் இந்த இடைத்தேர்தலில் ஜெய் தெலுங்கானா கோஷம் ஜெய்ய்..., யிக்கிறது.






