பிரிட்டன் பிரதமர் பேச்சில் அதிருப்தி : சர்தாரியின் பயணம் ரத்து?
இந்திய பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் குறிப்பிடுகையில், "ஆப்கானிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாது' என கூறியிருந்தார். பிரிட்டன் பிரதமரின் இந்த கருத்துக்கு, பாகிஸ்தானிய ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் கிலானி குறிப்பிடுகையில், "பிரிட்டன் பிரதமரின் இதுபோன்ற கருத்துக்களால் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடும்' என்றார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி குறிப்பிடுகையில், "பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒட்டு மொத்தமாக பாகிஸ்தான் அரசு மீது குறை கூறுவதை ஏற்க முடியாது. தவறான இந்த கருத்துக்களை கண்டிக்கிறோம்' என்றார். "பாகிஸ்தான் மீது குறை கூறியதில் மாற்றம் ஏதும் இல்லை; உண்மையைத் தான் தெரிவித்துள்ளேன்' என கேமரூன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரான்ஸ் நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்த மாதம் 3ம் தேதி பிரிட்டன் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். பிரதமர் கேமரூனின் கருத்தால் கோபமடைந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், அதிபர் சர்தாரி, பிரிட்டன் பயணத்தை தவிர்க்க வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளது. ஆனால், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தனது மகனை பார்ப்பதற்காக அதிபர் சர்தாரி செல்கிறார். இதனால், அவர் தனது பிரிட்டன் பயணம் சொந்த காரணங்களுக்காக என்று கூறி அவர் சமாளிக்கக்கூடும். ஏனெனில், அம்மாதிரி முடிவை எடுக்க அமெரிக்கா அனுமதிக்க வாய்ப்பில்லை.







