தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாண்டு நிறைவு விழா: அடுத்த மாதம் 25, 26ல் கொண்டாட தமிழக அரசு முடிவு
சென்னை: ராஜராஜசோழனின் தஞ்சைப் பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா, தஞ்சை மாநகரில் அடுத்த மாதம் 25, 26ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜராஜ சோழனின் தஞ்சைப் பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடுவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம், முதல்வர் கருணாநிதி தலைமையில், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நூலகக் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவை, தஞ்சை மாநகரில், செப்., 25, 26ம் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல்நாள் காலையில் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகள் நகரின் பல பகுதிகளிலும் நடத்தப்பட உள்ளன. தஞ்சை பெரிய கோவிலில் அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் தலைமையில், ஆயிரம் நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அந்த நடன நிகழ்ச்சிக்கு முன் நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்கு பின் 100 ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்படும்.
இரண்டாம் நாளில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சைப் பெரிய கோவிலில் பொது அரங்கமும், தஞ்சை திலகர் திடலில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தஞ்சைப் பெரிய கோவிலில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுதல், தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை துவங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடக்கின்றன. நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர்களையும், பல்வேறு சான்றோர்களையும், ஆன்றோர்களையும், அரசியல் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவடைவதை ஒட்டி, வரலாற்று கண்காட்சி ஒன்றை நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






