என்னை திருமணம் செய்ததால் மகளை தந்தையே கொன்றார்: காதலன் புகார்
திருநெல்வேலி : மதுரையில் விஷ ஊசி போட்டு மகள் மாரிச்செல்வியை தந்தை ரங்கசாமி கொன்ற வழக்கில், ""என்னை திருமணம் செய்ததால் தான், மாரிச்செல்வி கொல்லப்பட்டார்,'' என காதலன் மோகன்ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் ரங்கசாமி(47). பை பாஸ் ரோட்டில் டிராக்டர் ஒர்க்ஷாப் நடத்திவந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள் மாரிச்செல்வி(18) பிளஸ் 2 முடித்து வீட்டில் இருந்தார். கடந்த 24ம் தேதி பிற்பகல்மாரிச்செல்வி விஷம் குடித்ததாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரித்தனர்.அதில் மாரிச்செல்வியை ரங்கசாமியும் அவர் ஏற்பாடு செய்த ஆட்களும் விஷ ஊசிபோட்டும் காதில் விஷம் ஊற்றியும் கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து ரங்கசாமி கூறுகையில், ""என் மனைவி சுப்புலட்சுமியின் தம்பி மோகன்ராஜாவுடன் மாரிச்செல்வி பழகினார். பின் சென்னையில் தம்பி வீட்டிற்கு அனுப்பியிருந்த போது அங்கேயும் வேறு ஒரு நபருடன் பழகினார். குடும்ப மானம் கருதி கொலை செய்தேன்,'' என்று தெரிவித்தார். கொலை தொடர்பாக ரங்கசாமி, மற்றும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மாரிச்செல்வியை திருமணம் செய்த நெல்லை மாவட்டம் புளியங்குடியை அடுத்த சுந்தரேசபுரத்தை சேர்ந்த மோகன்ராஜா கூறியதாவது: நான் மதுரையில் எனது அக்கா சுப்புலட்சுமியின் வீட்டில் தங்கியிருந்து ஒர்க்ஷாப்பில் வேலை பழகினேன். அப்போது எனக்கும் மாரிச்செல்விக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த மே 10ம் தேதி இருவரும் திருப்பூர் சென்று சிவன்கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம்.
இந்த விஷயம் வீட்டிற்கு தெரியவந்ததால் மாரிச்செல்விக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை எனக் கூறி, வரும் டிசம்பரில் முறைப்படி திருமணம் செய்துவைக்கிறோம் என பிரித்தனர். ரங்கசாமியின் அக்கா வேல்தாயின் மகனுக்கு மாரிசெல்வியை திருமணம் செய்துவைக்கவேண்டும் என்பதுதான் இதற்கு காரணம். இதற்காக மாரிச்செல்வியை சென்னையில் உள்ள வேல்தாயின் வீட்டில் தங்கவைத்தனர். மாரிச்செல்வி என்னை தவிர யாரையும் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை. இதற்கிடையே நான் வேலைக்காக சிங்கப்பூர் சென்றுவிட்டேன்.
எனவே மாரிச்செல்வியையும் என்னையும் கொலை செய்யும் நோக்கில் ஆகஸ்ட்டில் திருமணம் என பேசினர். நான் ஆகஸ்ட்டில் ஊருக்கு வந்தேன். தனது அக்கா மகனுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட ரங்கசாமி அதற்கு மாரிச்செல்வி சம்மதிக்காததால், அவரை கொலை செய்தார். ரங்கசாமி சொல்வது போல மாரிச்செல்விக்கு யாருடனும் எந்த பழக்கமும் கிடையாது. இந்த வழக்கை முறைப்படி விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.






