ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என தெருவில் விளக்கேற்றும் பெண்கள்
திருவள்ளூர்: எருமையின் மீது புத்தாண்டு துவங்கியதால், ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து எனவும், பரிகாரமாக தெருவில் கோலமிட்டு விளக்கேற்ற வேண்டும் எனவும் வதந்தி பரவி வருகிறது. இதனால், பல கிராமங்களில் தெருக்களில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில், நேற்று முன்தினம் இரவு, பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு, கோலத்தின் மீது வாழை இலை வைத்து அதில் பச்சரிசியிட்டு, அதன் மீது வீட்டில் உள்ள ஆண்பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அத்தனை அகல் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.இந்த வதந்தியை, வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்களுக்கும் மொபைல் போன் மூலம் பரப்பி வருகின்றனர்.இவ்வாறு ஏற்றி வைக்கப்படும் அகல் விளக்குகள் குளிர்ந்ததும், அதை நீர் நிலைகளில் போட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் கலர் புடவை, தாலி கயிறு மாற்றுதல், தங்கைகளுக்கு சீர் வரிசை, தெருக்களில் விளக்கேற்றுதல் என வதந்திகள் பரவுவது வாடிக்கையாக உள்ளது.






