May 18, 2021
ஆலோசனை

தசைகளும் தொந்தரவுகளும்

நன்றி குங்குமம் டாக்டர்

நரம்புகள் நலமாக இருக்கட்டும்


நமது உடலில் சுமார் 650 தசைகள் உள்ளன. நமது தோற்ற அமைப்பிற்கும், உடலின் இயக்கத்திற்கும், வலிமைக்கும் முக்கிய பங்கு தசைகளுக்கு இருக்கிறது. உறுதியோடும், அதேசமயம் சுருங்கி விரியும் தன்மையோடும் உள்ள திசுக்களால் ஆனவையே தசைகள்.

நம் ஒவ்வொரு மூச்சுக்கும் மார்பு பகுதி ஏறி இறங்குவதற்கும், இசை நயத்தோடு நமது இதயம் துடிப்பதற்கும் காரணம் தன்னிகரற்ற தசைகளே. நமது எண்ணங்களும், உணர்ச்சிகளும் தசைகளின் மூலமே வெளிக்கொணரப்படுகின்றன. புன்னகையோ, அழுகையோ, பேசுவதோ, சாப்பிடுவதோ, நிற்பதோ, நடப்பதோ ஓடுவதோ, விளையாடுவதோ எதுவாக இருந்தாலும் நம் உடலின் ஒவ்வொரு அசைவும் தசைகளின் மூலமாகவே சாத்தியப்படுகின்றன.
தசைகளின் இயக்கமின்றி நாம் எந்த ஒரு செயலையும் செய்ய இயலாது. ஒரு ஆணின் எடையில் சுமார் பாதியும், பெண்ணின் உடல் எடையில் சுமார் மூன்றில் ஒரு பாகமும் தசைகள் உள்ளன. வேலை செய்வதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டு உள்ளதால் தசைகள் ‘உயிரின எந்திரங்களாக’ கருதப்படுகின்றன.

தசை மண்டலமானது மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை எலும்பு(சட்டக)தசைகள், வரியற்ற தசைகள்(மென் தசைகள்) மற்றும் இதய தசைகள். இதயம் சுருங்கி விரிய உதவுவது இதய தசைகள். மென் தசைகள்(வரியற்ற தசைகள்) ரத்த நாளங்கள் மற்றும் உடல் உறுப்புகளை சுற்றி இருப்பவை. ரத்த நாளங்களில் ரத்தம் தடையின்றி செல்லவும், செரிமான உறுப்புகளின் வழியாக உணவை தள்ளவும், சிறுநீரகங்களிலும் சிறுநீர் பைகளிலும் நீரைக் கொண்டு செல்லவும், கண்ணின் பாவையை ஒளிக்கேற்ப விரிவாக்கவும், சுருக்கவும் போன்ற அத்தியாவசியமான வேலைகளை
மென்தசைகள் செய்கின்றன‌. எலும்போடு இணைந்து அசைவுகளுக்கு உதவும் தசைகள் சட்டக தசைகள்.

உதாரணம் கை, கால், கழுத்து, வயிறு, முதுகுத்தசைகள். தசைகள் அளவிலும் தோற்றத்திலும் வேறுபடுபவை. சில நீளமானவை; சிலது மெலிதானவை, சிலது பருமனானவை. காதில் உள்ள சின்னஞ்சிறு எலும்புகளோடு இணைந்திருக்கும் தசைகளே உடம்பின் மிகச் சிறிய தசைகள். புட்டத்தில் இருக்கும் குலுடியஸ் மேக்ஸிமஸ்(Gluteus maximus) என்னும் தசையே மிகப்பெரிய தசை. நமது விரல்களிலும் உள்ளங்கையிலுமே 20-க்கு மேற்பட்ட தசைகள் உள்ளன. இவை அனைத்தும் இணைந்து எந்த நுண்ணிய வேலையையும் செய்யும் திறனை நமக்கு தருகின்றன.

நம் முகத்தில் மட்டுமே முப்பதுக்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன. சிரிப்பதற்கு மட்டுமே 14 தசைகள் தேவைப்படுகின்றன. சாப்பிடுவதற்கு 4 முதன்மை தசைகளும், 7 துணை தசைகளும் உதவுகின்றன. கோபத்தை வெளிக்காட்டுவதற்கு 18 தசைகள் இயங்குகின்றன. இப்படி ஒவ்வொரு உடல் அசைவுக்கும் பல தசைகள் இணைந்து செயல்படுகிறது.

தசை ஒவ்வொன்றும் பல தசை இழைகளால்(Muscle fibres) உருவாகிறது. ஓர் இழையின் நீளம் 3-5 செமீ. இவை ஒரு தசையிலைப் படலத்தால்(Sarcolemma) போர்த்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தசை இலையிலும் தசைஇழைக்கூல்(sarcoplasm) உள்ளது அதில் 4-20 தசை நுண்ணிழைகள்(Fibrils) உள்ளன. அவற்றில் ஆஸ்டின்(Actin) மயோசின்(Myosin) என்னும் புரதங்கள் உள்ளன. இவையே தசை இயக்கத்திற்கு உதவுகின்றன.

முதுகெலும்பு உடைய உயிரினங்கள் அனைத்திலும் உள்ள தசைகள், நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், சில தசைகள் தன்னிச்சையாக இயங்கக் கூடியன. மென்தசைகளும் இதயத்தசைகளும் தன்னிச்சையாக இயங்கக் கூடியன.சுந்தரிக்கு 10 வயது. ஹாஸ்பிடலில் நுழைந்தாலே அவளது புன்னகையால் அனைவரையும் வசியம் செய்துவிடுவாள். Infectious smile என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், அதாவது கிருமி போல் வேகமாக பரவக்கூடிய புன்னகை அது. கடந்த 5 வருடங்களாக தன் புன்னகையால் எல்லோரையும் வசியப்படுத்தி வருகிறாள். அவள் என்னைப் பார்க்க வந்தாலே, அன்றைய தினம் என் மனதுக்குள் ஒரு கனத்த பாரம் ஏறிவிடும்.

முதன்முதலில் வரும்போது அவள் மாடிப்படிகளில் ஏற கஷ்டப்படுகிறாள் என்றுதான் பெற்றோர்கள் அழைத்து வந்தனர். அப்போது அவளுக்கு 5 வயதிருக்கும். நடந்து காண்பிக்கச் சொன்னேன், சிரித்துக் கொண்டே நடந்தாள். கால்களை சேர்த்துக்கொண்டு குதிக்கச் சொன்னேன், அவளால் குதிக்க முடியவில்லை. அவளது இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டு பகுதிகள் சற்று இறுக்கமாக இருந்தது. ஒரு சில பரிசோதனைகளுக்குப் பிறகு அவளுக்கு தசைகளில் பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மருந்துகளும் பயிற்சிகளும் தொடர்ந்து கொடுக்கப்பட்டன.

ஓரிரு வருடங்களில் சுந்தரியால் தரையிலிருந்து உட்கார்ந்து எழுந்திருக்க முடியவில்லை. நடக்கும்போதும் சிரமப்பட்டு நடக்க ஆரம்பித்தாள். பாத்ரூம் சென்று வந்தாலே மூச்சு முட்டத் தொடங்கியது; பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அவளது ஒன்பதாவது வயதில் நடக்க முடியாமல் வீல்சேரின் உதவியுடனேயே பயணிக்க ஆரம்பித்தாள். அன்றும் டாக்டர் நீங்க சொன்னபடி நான் தினமும் நீச்சல் பயிற்சி செய்கிறேன், எக்ஸர்சைஸ் பண்றேன், மாத்திரை சாப்பிடறேன், இருந்தாலும் என்னால நடக்க முடியல, கைகால்கள் எல்லாம் வலிக்குது, மூச்சு வாங்குது, நான் எப்பதான் ஸ்கூலுக்கு போறது என்று என்னால் பதில் சொல்ல முடியாத கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.

சுந்தரிக்கு ஏற்பட்டிருக்கும் தசை வியாதியின் பெயர், டுஷீன் மஸ்குலர் டிஸ்ட்ரோபி (Duchenne muscular dystrophy). இந்தியாவில் பிறக்கும் 3000 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்த குறைபாட்டோடு பிறக்கிறது. மரபணுக்களின் மாறுபாட்டினால் தசைகளில் இருக்கும் செல்களில் உள்ள புரதங்களில் ஏற்படும் குறைபாடே இந்நோய்க்கான காரணம். டிஸ்ட்ரோஃபின் என்று சொல்லக்கூடிய அந்தப் புரதமானது முழுமையாக செயல் இழந்துவிட்டால் வருவதே Duchenne muscular dystrophy. இதனை தமிழில் தசைச்சிதைவு நோய் என்கிறோம்.

உடலை படிப்படியாக உருக்கும் தசைச்சிதைவு நோய்க்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பிசியோதெரபி மற்றும் பயிற்சிகளின் துணையோடு வலியை குறைக்கலாம், மருத்துவ உபகரணங்கள் மூலம் எழுந்து நிற்க, நடக்க முயலலாம். ஆனால் இந்நோயை முழுமையாக வெல்வதற்கு எந்த வழியும் இன்றளவும் கண்டறியப்படவில்லை. அக்குழந்தைகளுடைய ஆயுட்காலம் 10 - 12 வயது மட்டுமே.

உறவுக்குள் திருமணம் செய்வது, மரபியல் குறைபாடு, வாழ்க்கை முறை மாற்றம் என்று இந்நோய்க்கான காரணங்கள் பலவற்றை அடுக்கிக் கொண்டே போனாலும், நம் கண்ணெதிரே குழந்தைகள் சிறிது சிறிதாக நிற்க முடியாமல், நடக்க முடியாமல், மூச்சு விட முடியாமல் மாண்டு போவதை பொறுத்துக்கொள்வது மிகவும் கடினம். இக்குழந்தைகளுக்கு மருத்துவம் செய்யும் டாக்டர்களின் மனநிலை, பெற்றோர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

தசைகளில் வரும் நோய்கள் அனைத்தும் தீர்வு காண முடியாதது அல்ல. முருகன் 40 வயது மதிக்கத்தக்க விவசாயி. திடீரென்று காலையில் தூங்கி எழும்போது அவரால் கைகால்களை அசைக்க முடியவில்லை; எழ முடியவில்லை என்று மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் அழைத்து வந்திருந்தனர். முதல் நாள் இரவு வரை நன்றாக திடகாத்திரமாகவே இருந்திருக்கிறார்.

இரவு தூங்கும் முன்வரை நன்றாக இருந்த முருகனுக்கு, காலையில் விழித்தவுடன்தான் இவ்வாறு ஏற்பட்டிருக்கிறது. அவரை ஆய்வு செய்து பார்த்தபோது, அவரால் கை மற்றும் கால்களை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை. தலையையும் படுக்கையிலிருந்து மேலே தூக்க முடியவில்லை. கை, கால் மற்றும் கழுத்தில் இருக்கும் தசைகள் அனைத்தும் வலுவிழந்து இருந்தன. உடம்பில் உள்ள தசைகள் அனைத்திலும் பிரச்னை ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. தொடு உணர்வுகள் நன்றாகவே இருந்தது.

தனக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும், தான் தினமும் வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தை கரை சேர்க்க முடியும், என்னை தயவு செய்து காப்பாற்றி விடுங்கள் டாக்டர் என்று முருகன் கெஞ்சினார். ‘என்ன நடந்தது முருகன்? தெளிவாக கூறுங்கள்’ என்று அவரது அருகில் உட்கார்ந்து அவரது நோயின் வரலாற்றை அசை போட ஆரம்பித்தேன். முதல்நாள் காலை முதல் மாலை வரை கடுமையாக வேலை செய்துவிட்டு இரவு வீட்டில் சாதம், மீன் குழம்பு என்று நன்றாக சாப்பிட்டுவிட்டு படுத்தேன்.

காலையில் என்னால் எழ முடியவில்லை என்றார். எனக்கு பளிச்சென்று ஒன்று புரிந்தது. அது, அரிசி சாதம் நன்றாக சாப்பிடும்போது உடலில் இன்சுலின் அதிகமாக சுரந்து செல்களுக்குள் உணவில் இருந்து வரும் குளுக்கோஸை உள் செலுத்தும், அவ்வாறு குளுக்கோஸுடன், பொட்டாசியம் சத்துக்களும் செல்களுக்கு உள்ளே சென்றுவிடும்.

இதனால் செல்களுக்கு வெளியே உள்ள ரத்த நாளங்களில் பொட்டாசியத்தின் அளவு குறைந்துவிடும். பொட்டாசியம் அளவு குறைந்தால் தசைகள் வலுவிழந்து விடும். இவ்வாறு ஏற்பட்டதாலே முருகனின் தசைகள் வலுவிழந்து நிற்க, நடக்க முடியாமல் போனது. பொட்டாசியம் சிரப் வாய்வழியாக கொடுக்கப்பட்டது. முருகனுடைய தசைகளில் வலு ஏற்பட்டு ஓரிரு நாட்களிலேயே பழைய நிலைமையை அடைந்தார். கார்போஹைட்ரேட் (சாதம்) சாப்பிடும் அனைவருக்கும் இவ்வாறு ஏற்படுவதில்லை, ஒரு சிலருக்கே அவர்களது செல்களில் ஏற்பட்டுள்ள மரபணு மாற்றங்களால் இவ்வாறு பொட்டாசியம் சத்து குறைபாடு ஏற்படுகிறது.

நிர்மலா 45 வயது பெண்மணி, ஒரு அரசாங்க அலுவலகத்தில் மேல் அதிகாரியாக பணிபுரிகிறார் அவருக்கு சிறிது நாட்களாக உட்கார்ந்து எழ முடியவில்லை, கைகளை தலைக்கு மேலே தூக்க முடியவில்லை, படிகளில் ஏறுவது சிரமமாக இருக்கிறது, உடம்பு அசதியாக இருக்கிறது என்றும் கூறினார். அவரை ஆய்வு செய்து பார்த்த பிறகு அவருடைய தோள்பட்டை பகுதிகளிலும், இடுப்பு பகுதிகளிலும் உள்ள தசைகள் வலுவிழந்து இருந்தது.

 ரத்தப்பரிசோதனையில் அவருக்கு தைராய்டு குறைபாடு இருப்பது தெரிய வந்தது. தைராய்டுக்கான மாத்திரைகள் கொடுக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே நிர்மலாவின் தசைகள் வலுப்பெற்று, சுறுசுறுப்பாக பழைய நிலைமையை அடைந்தார். தைராய்டு தொந்தரவு உள்ளவர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். தசைகளில் தொந்தரவு உள்ளவர்களுக்கு என்ன காரணம் என்று கண்டறிந்து, அதற்கு ஏற்றார்போல் சிகிச்சை கொடுத்தால், அவர்கள் விடுபடுவது எளிது.

( நலம் பெறுவோம் !)