Feb 28, 2021
ஆலோசனை

கொரோனா பாதிப்புக்குள்ளான தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கலாமா?

என்னதான் கல்வி பெற்றிருந்தாலும், அனுபவமுள்ள நபர்கள் உடனிருந்தாலும் இன்னும் பல தாய்மார்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், எப்போதெல்லாம் தர வேண்டும், எதனால் குழந்தைகள் அழுகின்றன போன்ற அடுக்கான கேள்விகளுக்கு விடைகள் தெரியவில்லை. இந்த நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா என்ற கேள்வியும் சந்தேகமும் உதித்துள்ளது. மூதாதையர்களை பின்பற்றாததும், அவர்கள் வழிவகுத்த பாதை மாறி போனதும் இதற்கு ஓர் காரணமாக அமைந்திருந்தாலும், இன்றைய சூழல் எவ்வாறு இருக்கிறது, அதில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்குகிறார் ‘பொக்கிஷம்’ அமைப்பின் நிர்வாகி மற்றும் தாய்ப்பால் ஆலோசகர் பேபிஸ்ரீ.

பல தனியார் மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பேபிஸ்ரீ-யின் பூர்வீகம் கோவை. சென்னையில் வசித்து வரும் இவர், தனக்கு குழந்தை பிறந்த போது ஏற்பட்ட சந்தேகங்களை போல் மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதை உணர்ந்து, இது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளவும், அதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதற்காகவும் பாண்டிச்சேரியில் தாய்ப்பால் ஆலோசகருக்கான பாடம் படித்துள்ளார்.

“குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதை கோல்டன் ஹவர் என்று சொல்கிறோம். அப்போது குழந்தைக்கு பால் உறிஞ்சும் தன்மை அதிகமாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருப்பதால், பால் குடிக்க கற்றுக் கொள்கிறது. இதுதான் குழந்தையின் முதல் தடுப்பூசி. முதல் மூன்று நாட்களில் வருவது சீம்பால்தான். அதனால்தான் சிலர் அழுத்தி பார்க்கும் போது பால் இல்லாதது போல் உணர்கிறார்கள். குழந்தை வாய் வைத்து சப்பும் போது அது தானாக குழந்தைக்கு கிடைக்கிறது. இன்னும் ஒரு சிலர் சிசேரியன் செய்திருப்பதால் பால் கொடுக்க முடியாது என்று நினைத்துக்கொள்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது, ஒரு பக்கமாக படுத்து கொடுக்கலாம்”என்கிறார்.

“ஆறு மாதங்களுக்கு வெறும் தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தும் பேபிஸ்ரீ, அதற்கான காரணங்களை கூறும் போது, “முன்பு போல் இப்போதெல்லாம் தேன், சர்க்கரை தண்ணி, உர மருந்து, ஜாதிக்காய்… கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. இதனால் குடல் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஒரு சில வீடுகளில் குழந்தை உடம்பு வைக்கவில்லை, பால் பற்றவில்லை என்று, கூழ், பசும் பால் போன்ற ஆகாரங்களை கொடுக்கின்றனர். இது அந்த குழந்தையின் எதிர்காலத்தில் மலச்சிக்கல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்… உண்டாக வழிவகுக்கிறது. பசும் பால், அதன் கன்றுக்கு ஏற்றமாதிரி புரதம் நிறைந்திருக்கும். அது எப்படி குழந்தைக்கு ஒத்துவரும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தாய்ப்பால் தவிர மற்ற பால்கள் எதுவுமே குழந்தைக்கு ஒரு வருடத்திற்கு தரக்கூடாது. தாய்க்கு எந்த நோயாக இருந்தாலும், அதற்கான மருத்துவரின் ஆலோசனை பெற்று குழந்தைக்கு தாய்ப்பால் தரலாம். ஒரு குழந்தைக்கு அந்த நாளைக்கு தேவையான அனைத்து சக்தியும் தாய்ப்பாலில் மட்டுமே கிடைக்கிறது. இங்கு பலரது பிரச்சினையாக சொல்வது, குழந்தைக்கு பால் பற்றவில்லை. பால் குறைவாக இருக்கிறது. எல்லா தாயாலும் பால் கொடுக்க முடியும் என்பதை நம்ப வேண்டும். அதன் அடிப்படை புரிதல் இருந்தால் போதும். எதனால்? எப்படி?  பால் சுரக்கிறது, அதை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டாலே போதும். மார்பகத்தை அழுத்தி பார்த்து இதை கணிப்பது தவறு. தாய்ப்பால் அழுத்தும் போது வராவிட்டாலும் பாப்பா குடிக்கும் போது வரும். இதெல்லாமே புரோலோக்டின், ஆக்சிடோசின் என்கிற இரண்டு ஹார்மோன்களின்  வேலை.

குழந்தை மாரை சப்பும் போது புரோலோக்டின் ஹார்மோன் சுரக்கிறது. ஆக்சிடோசின் என்பது தாயின் மனநிலையை பொறுத்து சுரக்கும். அதேபோல் குழந்தை எவ்வளவு வாய் வைத்து குடிக்கிறதோ அந்த அளவுக்கு  பால் சுரக்கும். இதை விட முக்கியமானது தாயின் மனநிலை. தாயுக்கும்-சேயுக்கும் எவ்வளவு மகிழ்ச்சியான சூழல் உருவாக்குகிறோமோ அவ்வளவு நல்லது. இதற்கு ஒரு குடும்பமே உறுதுணையாக இருத்தல் அவசியம்” என்று கூறும் பேபி , குழந்தைக்கு தாய்ப்பால் போதுமானதாக இருப்பதை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்பது பற்றி பேசினார்.

‘‘ஒரு குழந்தை பால் குடித்த பின்னரும் அழுதுகொண்டே இருக்கிறதென்றால், பால் பற்றவில்லை என்பது மட்டும் அர்த்தம் கிடையாது. அதனை இரு விஷயங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒன்று அவர்கள் கழிக்கும் சிறுநீரின் அளவு. ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறாங்கன்னு கவனிப்பது ரொம்ப முக்கியம். மினிமம் ஆறிலிருந்து எட்டு முறை 24 மணி நேரத்திற்குள் போயிருக்க வேண்டும். இது சரியா பார்த்தாலே குழந்தைக்கு பால் போதுமானதா என்பதை தெரிந்து கொள்ளலாம். அடுத்து எடை. எல்லா குழந்தையுமே பிறந்த முதல் பத்து நாட்களில் எடை குறைவாங்க. சராசரியாக பதிநான்கு நாட்களில் பிறந்த எடை வந்துவிட வேண்டும்.

அதன் பின் எடை சீரான அளவில் கூடும். இது இல்லை என்றாலும் பால் பற்றவில்லை என்று தெரிந்துகொள்ளலாம். சரியான உணவு கிடைத்த பிறகும் குழந்தைகள் ஏன் அழுகின்றன என்கிற கேள்வி எழலாம். குழந்தைக்கு இந்த உலகமே புதிது. ஒரு கொசு உட்கார்ந்தாலும், பேசுவது பிடிக்காமலும், காத்து சத்தம் பிடிக்கவில்லையென்றாலும், வயிற்று வலி… என குழந்தைகள் அழுவதற்கு காரணங்கள் பல உண்டு. பசிக்கு மட்டும்தான் குழந்தை அழும் என்கிற எண்ணத்தை முதலில் நிறுத்த வேண்டும்” என்று கூறும் பேபிஸ்ரீ, “கொரோனா பாசிட்டிவ் வந்தால் கூட குழந்தைக்கு பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம்” என்கிறார்.

“தாய்ப்பால் நிறுத்தினால் தான் அந்த குழந்தைக்கு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று WHO எச்சரிக்கிறது. தாய்ப்பாலில்தான் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியெல்லாம் இருக்கிறது. அதே சமயம், வெளியிலிருந்து குழந்தையை பார்க்க வருபவர்கள் இந்த கொரோனா காலம் வரை தவிர்த்தால், தாயுக்கும் நல்லது, சேயுக்கும் நல்லது” என்கிறார் பேபிஸ்ரீ.

தொகுப்பு: அன்னம் அரசு