Oct 17, 2021
ஆலோசனை

கொரோனா இதயத்தை ஏன் பாதிக்கிறது?

கோவிட்-19 நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி சுவாச பிரச்னைக்கு வழி வகுக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த வைரஸ் இதயம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளையும் பாதிக்கிறது. குறிப்பாக, கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் இதயம் தொடர்பான சிக்கல்களுக்கும் ஆளாகிறார்கள். கொரோனா தொற்று ஏற்பட்ட எல்லோருக்கும் இதயக்கோளாறு ஏற்படாது என்பது ஆறுதலான விஷயம். கோவிட் வைரஸ் மிக அரிதாகவே இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

என்றபோதிலும்  கோவிட் -19 நோய்த்தொற்றுடன் தொடர்புடைய இதய வீக்கமானது மாரடைப்புக்கு வழி வகுக்கக் கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. கோவிட் தொற்றுடன் தொடர்புடைய இதய பாதிப்பு என்பது அறிகுறியற்றதாகவும், சிறிய அளவிலும் இருக்கலாம். தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து இதய பாதிப்பானது 59 சதவீதம் வரையிலும் இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதன் காரணமாக அரித்மியா எனப்படும் சீரற்ற இதயத் துடிப்பு, மாரடைப்பால் இதய பலவீனம் மற்றும் இதய வால்வு செயல்பாடு போன்றவற்றிலும் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கோவிட்-19 தொற்றானது ரத்த உறைதலுடன் தொடர்புடையதாக உள்ளதால் இதயம் அல்லது நுரையீரலில் பிரச்னையை ஏற்படுத்தும் சாத்தியம் உண்டு. இதில் மிதமான கோவிட் தொற்று, கடுமையான கோவிட் தொற்று என்ற பேதம் எதுவும் இல்லை.

ரத்தக் கட்டிகளை உருவாக்கும் அல்லது அதிக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு ரத்தம் உறையாமல் இருக்க சில வாரங்களுக்கு அதற்கான சிகிச்சை அளிக்கப்படும். இதில் ஏற்படும் சில எதிர்பாராத உயிர் இழப்புகளானது மாரடைப்பு அல்லது ரத்த உறைவு ஆகியவற்றின் காரணமாக ஏற்படலாம். கோவிட்-19 தொற்று தொடர்பாக அதிகரித்துள்ள கவலையானது, இதயம் தொடர்பான நோய்களை வெளிப்படையாக புறக்கணிக்க வழிவகுத்துள்ளது.

அச்சம் காரணமாக மருத்துவமனைக்கு செல்லாமல் தவிர்ப்பது, மக்களின் செயல்பாடுகளை சுற்றியுள்ள கட்டுப்பாடுகள், முறையாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைகளை பெறாமல் இருப்பது அல்லது முறையாக மருந்துகள் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, போதுமான உடல் உழைப்பு இல்லாமை, பொருளாதார பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களும் இதய பாதிப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.    

இதய நோய் உள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும்போது அவர்களுக்கு கோவிட்-19 பற்றிய அச்சம் இருக்கிறது. இருந்தபோதிலும் அந்த நோயாளிகளுக்கு தொற்று ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறும். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தரமான கோவிட் நெறிமுறைகள் மற்றும் மருத்துவ முன்னேற்றங்கள் ஆகியவற்றை இதய நோய் நிபுணர்கள் பயன்படுத்துகின்றனர்.  நுண்துளையீட்டு சிகிச்சை மூலம் அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து
அவர்களை அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் கையாள்கின்றனர். எனவே, கவலை வேண்டாம்!