Oct 17, 2021
ஆலோசனை

கொரோனா மற்றும் ஃப்ளு: பொதுவான அறிகுறிகள் என்ன ?

மழைகாலங்களில் குழந்தைகள், தொற்று நோய்களால் அதிகம் பாதிப்படைகின்றனர். இக்காலங்களில் ஃப்ளு (FLU) போன்ற காற்றில் பரவும் தொற்று நோய்கள் பரவலாக அதிகம் காணப்படுகின்றன. பொதுவாக பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை இது போன்ற வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தாலும், பெரும்பாலும் குழந்தைகள் குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஃப்ளூ தடுப்பூசி அவசியமானதாக உள்ளது.

ஃப்ளு போன்ற சிக்கலான தொற்று நோய் களிடமிருந்து தடுப்பூசி மூலம் நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக, குழந்தைகளை அவர்களின் வயதிற்கேற்ப தடுப்பூசியை செலுத்துவது அவசியம். பருவநிலை மாற்றங்கள் மற்றும் அதனை சார்ந்த காரணங்களால் குழந்தைகள் விரைவில் நோய்தொற்று ஏற்படவாய்ப்புள்ளது. இது போன்ற தொற்றுகள் வராமல் தடுக்க குழந்தைகளுக்கு தகுந்த சமயத்தில் தடுப்பூசி செலுத்துவது இன்னும் முக்கியம்.  

ஃப்ளு தடுப்பு மருந்தை செலுத்தி கொள்ளும் வழிமுறைகள்

வயது மற்றும் உடல் நலத்திற்கு ஏற்ப தடுப்பூசி முறை அல்லது மூக்கு வழியாக நோய் தடுப்பு மருந்து இடப்படுகிறது. ஃப்ளு தடுப்பூசி, குழந்தைகளுக்கு 6 மாதம் வயது முதல் வழங்கலாம். மூக்கு வழி தடுப்பு மருந்து ஆரோக்கியமான 2 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு வழங்கலாம்.
 
ஃப்ளு தடுப்பூசி நன்மைகள் என்ன?

இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு தன்மை, வளர்ந்து வரும் நிலையில் இருக்கும். அவர்களுக்கு சளி மற்றும் அதனை சார்ந்த காய்ச்சல் எளிதில் தொற்றிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் சிறந்த வழியாக ஃப்ளு தடுப்பூசி கருதப்படுகிறது.

குழந்தைகளுக்கு ஃப்ளு தடுப்பூசி எப்போது கொடுக்க வேண்டும்?

6 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஃப்ளு தடுப்பூசி கொடுப்பது அவசியமாகும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் ஃப்ளு தடுப்பூசி கொடுக்கவேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கு ஃப்ளு தடுப்பூசி கொடுப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.

மேலும், தற்போதைய கொரோனா தொற்று சமயத்தின்போது ஃப்ளு தடுப்பூசி எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். ஃப்ளு தடுப்பூசி கொரோனாவை தடுக்காது, எனினும் காய்ச்சல், மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை போன்றவற்றை பெருமளவு குறைத்து குழந்தைகளை பாதுகாக்கும்.  

ஃப்ளு மற்றும் கொரோனா - பொதுவான அறிகுறிகள் என்ன?

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) அறிவித்துள்ளபடி ஃப்ளு மற்றும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் பொதுவானதாகவே திகழ்கிறது. காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், மிகுந்த சோர்வு, வாசனை உணர்வு இழப்பு, தொண்டை வலி, தலைவலி அல்லது உடல் வலி போன்ற பொதுவான அறிகுறிகள்
காணப்படுகின்றன.

ஃ ப்ளூ தடுப்பூசி ஏன் அவசியம்?

உருமாறும் ஃப்ளு வைரஸ் ஏற்படுத்தும் தாக்கத்தை எதிர்கொண்டு குழந்தைகளிடையே நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யவும், பருவநிலை மாற்றங்களால் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் சளி மற்றும் காய்ச்சலை தடுக்க மற்றும் வரவிடாமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதற்கு  தகுந்த சமயங்களில் குறிப்பாக மழைக்காலத்திற்கு முன்பாகவே குழந்தைகளுக்கு ஃப்ளு தொற்று தடுப்பூசியை கொடுப்பது மிகவும் அவசியம்.  

தடுப்பூசி அளித்த பின் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன?  

ஃப்ளு தடுப்பூசி அளித்த பின்னரும் சுகாதார நடவடிக்கைகளை தொடர வேண்டும். சிறுகுழந்தைகள் அடிக்கடி தரையில் தவழ நேரிடும். அது போன்ற நேரங்களில் குழந்தைகளின் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். மேலும் வீட்டு தரையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தாய்ப்பாலில் உள்ள ஆன்டிபாடீஸ் காரணமாக குழந்தைகளுக்கு சளி மற்றும் இதர தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

மேலும் உடல் நலம் குன்றியவர்களிடம் குழந்தையை நெருங்க விடுவதைத் தவிர்க்க வேண்டும். இருமல் அல்லது தும்மல் வரும் போது கைக்குட்டை கொண்டு வாய் மற்றும் மூக்கை மெதுவாக மூடுங்கள். உபயோகித்த கைக்குட்டையை வெந்நீரில் துவைக்கவும்.