Aug 03, 2021
அழகு குறிப்புகள்

குளிர் காலமும் முக தசை வாதமும்!

நன்றி குங்குமம் தோழி

பெல்ஸ் பேல்சி (Bell’s Palsy) என்று மருத்துவத்தில் அழைக்கப்படும் முக தசை வாதமானது, மழை மற்றும் குளிர் காலங்களில் மட்டும் அதிகம் காணப்படும் ஒன்றாகும். இது பற்றி நம்மில் வெகுசிலரே அறிந்து வைத்திருப்பர். இவ்வாதம் ஏற்படுவதினால் முகத்தின் அழகு, அம்சங்கள் சிறிது காலம் உருமாறி விடக்கூடும். அதனால் இவ்வாதத்தைக் கண்டு பாதிக்கப்பட்ட அனைவரும் அஞ்சுவர். இப்படிப்பட்ட வாதத்தைப் பற்றி இயன்முறை மருத்துவரான கோமதி இசைக்கர் விளக்கம் அளிக்கிறார்.

முக தசை வாதம் என்பது முகத்தில் உள்ள தசைகள் பலவீனமடைந்து சில சமயம் செயலிழந்து போவது. இது பெருமளவு ஒரு பக்க முகத்தின் தசைகளை மட்டுமே பாதிக்கும். தசைகள் இயங்குவதற்கு மூளையில் இருந்து வரும் சமிக்ஞையை அனுப்பும் ஒரு கருவியே நரம்புகள்.முகத்தின் தசைகள் இயங்க மூளையில் இருந்து மண்டை ஓட்டின் இயற்கை துளை வழியாக காதின் பின்புறத்தில் இருந்து முகத்திற்கு நரம்புகள் வரும். இந்நரம்புகள் வீக்கம் பெற்று, அது வரும் துளையை அடைத்து கொள்ளும், அதனால் சமிக்ஞையை தசைகளுக்கு கடத்த இயலாது. இதனால் தசைகள் தற்காலிகமாக பலவீனம் அடையும். சில சமயம் முழுவதுமாக செயலிழந்தும் போகலாம்.

இவ்வாதத்தால் 10,000-ல் 1 முதல் 4 நபர்கள் ஒரு வருடத்திற்கு பாதிக்கப்படுகிறார்கள். இது பொதுவாக 15 வயது முதல் 60 வயது வரை இருப்பவர்களை தாக்குமெனினும் சில பள்ளி செல்லும் குழந்தைகளையும் பாதிக்கக்கூடும். அதில் ஆண், பெண் இருபாலரும் அடங்குவர்.அப்படி என்ன செய்கிறது இந்த முக தசைகள்?

முக தசைகள் கண்களை மூடித் திறப்பதற்கு, புருவங்களை மேல் கீழ் அசைப்பதற்கு, புருவத்தை சுருக்கிப் பார்ப்பதற்கு, மூக்கு உறிவதற்கு, சிரிப்பதற்கு, மற்ற முக பாவனைகள் செய்வதற்கு, வாயில் உள்ள உணவை அசை போடவும், ஊதுவதற்கும், சொற்கள் பிறழாமல் பேசுவதற்கும் உதவும். அது மட்டுமின்றி இம்முக நரம்பு கண்களில் இருந்து வரும் கண்ணீரை கட்டுப்படுத்தவும், நாவின் முன்புறம் உள்ள பகுதியில் சுவையை உணர்த்தும் வேலையும் செய்கிறது.

முகவாதம் ஏற்படும் போது அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட நரம்பினால் முகத்திலுள்ள தசைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் வாயிலிருந்து உமிழ்நீர் வழிவதும், பாதிக்கப்பட்ட பக்கத்தில் உள்ள கண்ணை திறப்பதற்கு சிரமமும் ஏற்படும். புருவங்களை மேலே கீழே அசைக்கவும் சுருக்கவும் கடினமாக இருக்கும். வாயில் உள்ள உணவை அசைப்போடக் கடினமாக இருக்கும்.

வாயில் காற்றை ஊத முடியாமல் இருப்பது, வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாமல் போவது, வாயில் இருந்து உமிழ் நீர் வெளியேறிக் கொண்டு இருப்பது, கண்ணில் இருந்து நீர் வழிந்து கொண்டு இருப்பது அல்லது சிலருக்கு கண் உலர்ந்து விடுதல், நாக்கின் முன்பகுதிகளில் சுவையை உணரமுடியாமல் போவது அல்லது சுவையில் மாற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். வெகு சிலருக்கு தாடை வலி, தலை வலி, காது வலி வரக்கூடும்.

காரணம் என்னவாக இருக்கும்..?

இதன் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனினும் ஆபத்து காரணிகளாக இருப்பது குளிர் காலம், ‘பொன்னுக்கு வீங்கி அம்மை’ போன்ற வைரஸ் நோய்கள், விபத்துகளில் நேரடியாக நரம்புக்கு பாதிப்பு ஏற்படுவது போன்றவை ஆகும். பக்கவாதம், மூளையில் புற்றுநோய் போன்ற சில நோய்களிலும் இவ்வாதத்தைக் காணலாம். இதனைக் கண்டறிய எக்ஸ்-ரே, ஸ்கேன் போன்ற சோதனைகள் அவசியம் இல்லை. வீட்டிலேயே மேல் சொன்ன அறிகுறிகளை வைத்து எளிதில் உறுதிப்படுத்தலாம்.

சிகிச்சை முறைகள்


இயன்முறை மருத்துவத்தில் பலவீனமான தசைகளையும், பாதிக்கப்பட்ட நரம்பையும் திரும்ப அதன் இயல்புக்கு செயல்பட வைப்பதற்கு ‘சிகிச்சை மின்னோட்டம்’ தருவர். அத்துடன் பயிற்சிகள் வழங்கப்படும். கண்களை இருக்கமாக மூடுவதும் திறப்பதும், புருவங்களை சுருக்கி விரிப்பது போன்ற முகபாவனைகளை (முக அசைவுகள்) பயிற்சி செய்வது, பலூன் ஊதச் சொல்லுதல், சிவிங்கம் மெல்லச் சொல்லுதல், ஆங்கில உயிர் எழுத்துக்களான
(a e i o u) இவற்றை சரியாக உச்சரிக்கப் பழகுவது போன்ற பல பயிற்சிகள் மூலமும், அவற்றோடு முகத்திற்கு மசாஜ், டேப்பிங் போன்ற நுட்பங்களை கையாண்டு சிகிச்சையும் அளிப்பார்கள்.

ஆங்கில மருத்துவத்தில் ஏதேனும் வைரஸ் தொற்று இருந்தால் அதற்கான மருந்துகளை மருத்துவர் வழங்குவர். ஸ்டீராய்டுகளையும் வலி நிவாரணி மாத்திரைகளையும் ஆரம்பகாலத்தில் வழங்குவர். பெரும்பாலும் 15 நாட்களில் தசைகள் தேர்ச்சி பெரும் அறிகுறிகள் தெரியும். குறைந்தபட்சம் 1 மாத காலத்தில் தசைகள் இயல்பு நிலைக்கு வந்துவிடும், அதிகப்படியாக வெகு சிலருக்கு 6 மாதக் காலம் ஆகலாம். ஒரு வருடக் காலமாகியும் குணமாகவில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

செய்ய வேண்டியவை, வேண்டாதவை?

குளிர் காலத்தில் இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த சமயத்தில் கட்டாயம் குளிர் கால உடைகளை அணிந்து கொண்டு தான் வெளியே செல்ல வேண்டும்.

அதிகாலை நேரங்களையும், சூரியன் மறைந்த பின்னும் குளிர் காற்றில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். குளிர் நீரில் குளிக்க கூடாது. கண்களை சிலருக்கு மூடமுடியாது அதனால் ஷாம்பு, சோப்பு போன்றவை கண்களை தீண்டாதவாறு கவனம் வேண்டும். கண்களில் அதிகம் வறட்சி ஏற்பட்டால் மருத்துவர் பரிந்துரைப்படி கண்ணுக்கு ‘சொட்டு மருந்து’ உபயோகிக்கலாம். கடினமான உணவுப் பொருட்களை சில நாட்கள் தவிர்க்க வேண்டும்.

வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

குளிர் காலத்தில் குளிர் தடுப்பு ஆடைகள், கை கால்களுக்கு உரைகளை உடுத்திக் கொள்வது, மப்லர் போன்ற குளிர் கால உடைகளை பயன்படுத்துவது அவசியம். காலையில் தாமதமாக (பனி குறைந்த பின்) வெளியே செல்வதன் மூலமும் முகவாதத்தை மிக எளிதில் முகமலர்ச்சியுடன் குணப்படுத்தலாம்.