Sep 19, 2021
அழகு குறிப்புகள்

அந்த ஒரு புன்னகைக்கு எவ்வளவு கோடி கொடுத்தாலும் ஈடாகாது!

நன்றி குங்குமம் தோழி  

பிரைடல் மேக்கப் கலைஞர் சங்கீதா கைலாஷ்

எந்த ஒரு பெண்ணும் தன் திருமண நாளன்று பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு. அழகாக இருக்கும் பெண்களை கூட மேலும் மிளிர செய்யும் அளவுக்கு மேக்கப் துறை வளர்ந்துவிட்டது. நயன்தாரா லுக், கீர்த்தி சுரேஷ் கட்ன்னு மேக்கப் மூலம் ஒருவரின் தோற்றத்தை மாற்றவும் முடியும். அந்த அளவுக்கு இதன் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அவ்வாறு வளர்ந்துள்ள துறையில் தனக்கென்று ஒரு பாதை அமைத்து அதில் பல போராட்டங்களை தாண்டி பயணித்து வருகிறார் சங்கீதா கைலாஷ்.

‘‘நான் பெங்களூர் வாசி. ரொம்ப சாதாரண குடும்பத்தில் தான் பிறந்தேன். எனக்கு இரண்டு அக்கா, ஒரு தம்பி. அப்பா ஒருவரின் வருமானத்தில் தான் என் குடும்பம் நகர்ந்தது. அப்ப நான் பத்தாம் வகுப்பு படிச்சிட்டு இருந்த சமயம். வீட்டில் பெரிய அளவில் பணக்நெருக்கடி ஏற்பட்டது. அப்பா அதை எங்களிடம் வெளிப்படுத்தல. தன்னால் சமாளிக்க முடியும்ன்னு அவருக்கு நம்பிக்கை இருந்தது. அந்த சமயத்தில் அவருக்கு உதவியா இருக்கணும்ன்னு நினைச்சு, வேலைக்கு போக முடிவு செய்தேன்.

வார நாட்களில் பள்ளிக்கு செல்வேன். வார இறுதி நாட்களில் டேட்டபேஸ் சம்பந்தமான வேலைப் பார்ப்பேன். ஒரு நாளைக்கு 500 ரூபாய்ன்னு வருமானம் கிடைச்சது. இதற்கிடையில் பத்தாம் வகுப்பும் தேர்ச்சி பெற்றேன். அதே சமயம் கிளப் மஹேந்திராவில் டெலிக்காலரா வேலைக் கிடைச்சது. ஆறு மாசத்தில் என் திறமையைப் பார்த்து என்னை விற்பனை துறைக்கு மாற்றினாங்க.

சம்பளமும் உயர்ந்தது. அதனால் நான் பாதியில் விட்ட படிப்பை படிக்க நினைச்சேன். தொலைத்தொடர்பில் பட்டப்படிப்பு முடிச்சேன். இதற்கிடையில் டைட்டடன், டெல் போன்ற பல தனியார் நிறுவனத்தில் விற்பனை துறையில் கிட்டத்தட்ட பத்து வருட அனுபவம் ஏற்பட்டது’’ என்றவர் சொந்தமாக ெதாழில் செய்யவேண்டும் என்பதில் தீவிரமானார்.

‘‘பட்டப்படிப்பு முடிச்ச பிறகு மேலும் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அது மட்டுமில்லை, பத்து வருடமாக ஒருவருக்கு கீழ் வேலைப் பார்த்துவிட்டேன். இனிமேல் எனக்கான ஒரு தொழில் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஃபேஷன் டிசைனிங் மற்றும் அழகு கலை குறித்து படிச்சேன். அதன் பிறகு பெங்களூரில் சிறிய அளவில் பொட்டிக் ஆரம்பிச்சேன். இதெல்லாம் முடித்து எனக்கான வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது, எங்க வீட்டில் வரன் பார்க்க ஆரம்பிச்சாங்க. வங்கி துறையில் வேலைப் பார்த்து வந்த கைலாஷ் என்பவரை கரம் பிடிச்சேன். அவர் சென்னை என்பதால், நான் ஆசையாக ஆரம்பித்த பொட்டிக்கை அப்படியே மூடிவிட்டு சென்னைக்கு பயணமானேன்.

கல்யாணம், குடும்பம், அன்பான கணவர், புது வாழ்க்கை... என ஆயிரம் கனவுகளுடன் என் அடுத்தக்கட்ட வாழ்க்கையின் ஏணிப் படியில் பாதி தூரம் கூட கடந்து இருந்திருக்க மாட்டேன். அதற்குள் நான் பாதாளத்தில் தள்ளப்படுவேன் என்று கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை. கல்யாணமான இரண்டே மாதத்தில் என் கணவருக்கு ஒரு விபத்தில் முதுகுத் தண்டில் அடிபட்டது. இடுப்புக்கு கீழ் அவருக்கு உணர்ச்சியே இல்லை. அவரால் இனி எழுந்து நடக்கவே முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். எனக்கு என்ன செய்றதுன்னு புரியல.

புது ஊர், இங்க யாரையும் தெரியாது. உதவிக்கு கூட யாரும் கிடையாது. வாழ்க்கையை எதிர்த்து போராடுவோம்னு நானும் என் கணவரும் முடிவு செய்தோம். முதலில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தேன். அதன் பிறகு பிசியோதெரபி மற்றும் இதர சிகிச்சை எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சேன். இதற்கே எங்க சேமிப்பில் பாதி கரைந்து போனாலும், எழுந்து நடக்க முடியாதுன்னு சொன்னவரை, ஆறே மாசத்தில் நடக்க வச்சேன். ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், அடுத்தக்கட்டம் நகர்வதற்கு பணத்தேவை அவசியமாக இருந்தது.

இவரால் இப்போதைக்கு வேலைக்கு போக முடியாது. நான் வேலைக்கு போக முடிவு செய்தேன். ஓட்டல் நிறுவனத்தில் விற்பனை துறையில் வேலைக்கு சேர்ந்தேன். நான் படிச்ச அழகுக் கலையும் அந்த நேரத்தில் எனக்கு கைக்கொடுத்தது. விடுமுறை நாட்களில் தெரிந்தவர்கள் நண்பர்களுக்கு மேக்கப் போட ஆரம்பிச்சேன். அவர்கள் மூலம் மணப்பெண் அலங்காரமும் போடும் வாய்ப்பு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மேக்கப் துறையில் எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.

ஒரு முறை மணப்பெண்ணுக்காக அலங்காரம் செய்த போது, அவங்க போட்டோகிராபர், மண்டப அலங்காரம் மற்றும் உடை குறித்து விவரம் கேட்டாங்க. நான் எனக்கு தெரிந்தவர்களை அறிமுகம் செய்தேன். நான் சொன்னேன் என்ற ஒரே காரணத்தால், நான் குறிப்பிட்டவர்களை ஒப்பந்தம் செய்தாங்க. அந்த சமயத்தில் எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஒரு மணப்பெண்ணிற்கு அலங்காரம் மட்டும் தேவையில்லை. அதையும் தாண்டி திருமணம் குறித்து பல விஷயங்களை தேடுறாங்கன்னு புரிந்தது. இதைப் பற்றி நான் மேடைப் போட்டு அறிவிக்க முடியாது.

ஆனால் ஒரு புத்தகமாக கொடுத்தால், எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும்ன்னு நினைச்சேன். அப்படித்தான் ‘வரா’ உதயமானாள்’’ என்றவர் அந்த இதழ் பற்றி விவரித்தார்.‘‘பொதுவாக ஒரு ஊருக்கு போகும் போது, அந்த ஊரில் உள்ள உணவகம், தங்குமிடம், சுற்றிப்பார்க்கும் இடங்கள் பற்றி எல்லாம் தெரிந்து கொண்ட பிறகு தான் பயணம் செய்வோம். கல்யாணமும் அப்படித்தான்.

மணப்பெண் அலங்காரம் முதல் அவர்களுக்கான உடை, நகை, மேக்கப், புகைப்படம், மண்டப அலங்காரம், பூ வேலைப்பாடு... என பல விஷயங்கள் இருக்கு. ஒவ்வொரு தேவைக்கும் ஒரு நிபுணர்கள் இருப்பாங்க. அவர்களை ‘வரா’ மூலம் மணப்பெண்களுக்கு அடையாளம் காட்ட நினைச்சேன். இது மற்ற இதழ்களை போல் கிடையாது. முற்றிலும் வித்தியாசமானது. குறிப்பாக மணப்பெண்கள், அழகுக் கலை நிபுணர்கள், புகைப்பட நிபுணர்கள், அலங்கார நிபுணர்களுக்கானது. முழுக்க முழுக்க மணப்பெண் சார்ந்த விஷயங்கள் மட்டுமே இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். கடந்த மாதம் தான் வராவின் முதல் இதழை வெளியிட்டேன்.

வருடத்திற்கு நான்கு புத்தகங்கள் என திட்டமிட்டிருக்கிறேன். புத்தகமாக மட்டுமில்லாமல் டிஜிட்டல் முறையிலும் வெளியிடுகிறேன். தற்போது சென்னையில் மட்டுமே வெளியிட்டு இருக்கிறேன். அடுத்து கோவை, பெங்களூர், ஐதராபாத், மும்பை, தில்லி என தேசிய அளவில் கொண்டு செல்லும் எண்ணம் இருக்கு. கல்யாண மண்டபம், ஓட்டல், அழகு நிலையம், விமான நிலையம்... என குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் என்பதால் இலவசமாக கொடுக்கிறேன்’’ என்றவர் வசதியற்றவர்களுக்கு கட்டணமில்லா மணப்பெண் அலங்காரமும் செய்கிறார்.

‘‘எல்லா பெண்களுக்கும் தங்களின் மணநாளன்று அழகாக இருக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அதற்கான செலவு செய்ய முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு இலவசமாக மணப்பெண் அலங்காரம் செய்து தருகிறேன். அவர்கள் முகத்தில் வெளிப்படும் சந்தோஷத்தை பார்க்கும் போது ஏற்படும் மனநிறைவுக்கு எவ்வளவு கோடி கொடுத்தாலும் ஈடாகாது. மேலும் கல்லூரி மாணவிகளுக்கும் இலவச க்ரூமிங் (grooming) பயிற்சியும் அளிக்கிறேன்’’ என்ற சங்கீதா விரைவில் பிரைடல் ஃபேஷன் ஷோ மற்றும் பிரைடல் காலண்டரும் அறிமுகம் செய்ய இருக்கிறார்.

தொகுப்பு: ஷம்ரிதி