Jan 18, 2020
பாலிவுட் செய்திகள்

சாய்னா நேவால் வாழ்க்கை சரித்திர படத்திலிருந்து ஷ்ரத்தா திடீர் விலகல்

பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இதற்கிடையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து சாய்னாவை நேரில் சந்தித்து பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். தனது வீட்டுக்கு வந்த ஷ்ரத்தாவுக்கு சாய்னா விருந்தளித்து உபசரித்தார். பின்னர் பேட்மின்டன் பயிற்சி பெறத் தொடங்கினார் ஷ்ரத்தா.

பேட்மின்டன் விளையாடும் ஸ்டைல் குறித்து ஷ்ரத்தாவுக்கு சாய்னாவே பயிற்சியும் அளித்தார். சுமார் 1 வருடம் பேட்மின்டன் பயிற்சி எடுத்து கொண்டார் ஷ்ரத்தா. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் திடீரென்று அதிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறார் ஷ்ரத்தா. ஷ்ரத்தாவின் திடீர் விலகலுக்கு காரணம் கூறாவிட்டாலும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. 1 வருடம் பயிற்சி எடுத்தும் பேட்மின்டன் விளையாட்டை சாய்னாபோல் எனர்ஜியாக விளையாட முடியவில்லை.

ஒவ்வொரு காட்சியிலும் பல்வேறு டேக் எடுக்க வேண்டியிருந்தது. இதில் நொந்துபோன ஷ்ரத்தா தன்னால் இந்த கதாபாத்திரத்தில் முழுமையாக நடிக்க முடியாது என்று இயக்குனரிடம் கூறிவிட்டு விலகி விட்டாராம். வெவ்வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதும் மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. ஷ்ரத்தா விலகிய உடன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பரிணிதி சோப்ரா ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து பரிணிதி, தீவிரமாக பேட்மின்டன் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.