Jan 22, 2021
பாலிவுட் செய்திகள்

கொரோனாவால் திடீர் சிக்கல் புதிய தொழில்நுட்பத்தில் சரித்திரப் படங்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இனி அரசாங்கம் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்தாலும், நினைத்து பார்த்திருக்காத அளவுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கும். குறிப்பாக, நிறைய ஆட்கள் ஒரே இடத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்காது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றும் சரித்திரப் படங்களின் படப்பிடிப்பு நடத்த தற்போது வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, இனிமேல் சரித்திரப் படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் புதிய தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படுகின்றன. விர்ச்சுவல் புரொடக்‌ஷன் என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹாலிவுட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பே 300, ரைஸ் ஆஃப் தி எம்பயர், பிரிப்பேர் ஃபார் குளோரி ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. சமீபத்தில் வெளியான தி லயன் கிங், மேண்டலோரியன் ஆகிய படங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. அதாவது, அனைத்து படப்பிடிப்புகளும் புளூமேட், கிரீன்மேட் ஸ்டுடியோவுக்குள் நடக்கும். காட்சிகளுக்கான பின்னணி தனியாக படமாக்கப்பட்டு இணைக்கப்படும் அல்லது கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்படும்.

தற்போது இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதல்முறையாக மலையாளத்தில் உருவாகும் சரித்திரப் படத்தை கோகுல்ராஜ் பாஸ்கர் இயக்க, பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார். ‘இந்த காலக்கட்டத்தில் பிரமாண்டமான சரித்திரப் படங்களை உருவாக்க இதுபோன்ற டெக்னாலஜிதான் மாற்றுவழி. இதில் தற்போது பல்வேறு புதிய தொழில்நுட்பங்களும் இணைந்துள்ளது. படப்பிடிப்புக்காக கொச்சியில் பிரமாண்டமான ஸ்டுடியோ ஒன்று அமைக்கப்படுகிறது. மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்’ என்றார், கோகுல்ராஜ் பாஸ்கர்.
தமிழில் தயாராகும் பொன்னியின் செல்வன் என்ற படத்தை, லாக்டவுனுக்கு பிறகு  இயக்குனர் மணிரத்னம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.