Jul 12, 2020
குற்றம்

நடத்தை சந்தேகத்தால் விபரீதம் மனைவியை கொன்று கணவன் தற்கொலை: தாம்பரம் அருகே பரிதாபம்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர், விவேக் நகர், 5வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஜெகன்நாதம் (75). இவர், ஜெனரேட்டர் பழுதுபார்க்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுலோக்‌ஷனா (62). இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். மகன் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். ஒரு மகள் ஆந்திர மாநிலத்திலும், ஒரு மகள் சென்னை போரூர் பகுதியிலும், மற்றொரு மகள் புது பெருங்களத்தூர் விவேக் நகர் பகுதியிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஜெகன்நாதமுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்காக மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர், தனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு, அதற்காக புதிதாக அரிவாள் ஒன்றை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு அவரது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, வீட்டின் மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஒருவர் மாடிக்கு சென்றபோது அங்கு ஜெகன்நாதம் தூக்கில் தொங்கியபடி இறந்திருந்தால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனே அவரது வீட்டிற்கு சென்றபோது, அங்கு அவரது மனைவி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து உடனே பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து, சடலங்களை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.