Mar 02, 2021
குற்றம்

புதிய மீட்டர் பொருத்த 5 ஆயிரம் லஞ்சம் மின்வாரிய ஆய்வாளர் கைது

சென்னை:  திருவள்ளூர் அடுத்த மோவூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(35), தனது வீட்டுக்கு புதிய மின் மீட்டர் பொருத்த நெய்வேலி கூட்டுச் சாலையில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளர் பூண்டி பிரிவு அலுவலகத்திற்கு சென்றார். அங்கு  பணியில் இருந்த வணிக ஆய்வாளரான திருமுல்லைவாயல் லோகநாதனை (49)  தொடர்பு கொண்டபோது, அவர், “புதிய மின் மீட்டர் வழங்க ₹5 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும். அப்போதுதான் நடவடிக்கை எடுப்பேன்” என கூறியுள்ளார்.  லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ், இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கலைச்செல்வன் அறிவுரைப்படி, சுரேஷ் நேற்று ரசாயனம் தடவிய 5  ஆயிரத்தை லோகநாதனிடம் வழங்கினார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஓழிப்பு பிரிவு டிஎஸ்பி கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், தமிழரசி ஆகியோர் லோகநாதனை கைது செய்தனர்.  தொடர்ந்து, அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை  செய்தனர். அதில், கணக்கில் வராத பணம் 41 ஆயிரம் சிக்கியது. அந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து லோகநாதனை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.