Mar 05, 2021
குற்றம்

கள்ள தொடர்பை கைவிட மறுத்ததால் ஆத்திரம் மனைவி எரித்து கொலை: கணவனும் பலி : மகள் கவலைக்கிடம்

சென்னை: அச்சிறுப்பாக்கம் அருகே இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (42). இவரது மனைவி ஜீவா (38). கூலி தொழிலாளர்கள். இவர்களது மகள் பவித்ரா (18). தனியார் கல்லூரியில் படிக்கிறார். ஜீவாவுக்கு அதே பகுதியை சேர்ந்த  ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த பார்த்திபன், மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர் கள்ளத்தொடர்பை துண்டிக்கவில்லை என கூறப்படுகிறது.  இதுதொடர்பாக, நேற்று காலை அவர்களுக்குள் தகராறு  ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பார்த்திபன், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஜீவா உடலில் ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீ பரவியதால், அவர் அலறி துடித்தபடி, அங்குமிங்கும் ஓடினார். அதை பார்த்து காப்பாற்ற முயன்ற  அவரது மகள் பவித்ரா மீதும் தீப்பற்றியது. அவர், தந்தை பார்த்திபனை அணைத்து கொண்டதால், அவரும் தீயில் சிக்கினார்.

3 பேரும் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர்.  அதற்குள் ஜீவா, உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். பார்த்திபனும், மகள் பவித்ராவும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து அச்சிறுப்பாக்கம்  போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த தந்தை, மகளை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும், சடலத்தை பிரோத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பினர். அங்கு சிகிச்சை  பலனின்றி நேற்று இரவு பார்த்திபன் இறந்தார். பவித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.