May 29, 2020
வர்த்தகம்

2ம் நாளாக சரிவில் தங்கம் விலை : சவரன் ரூ.248 குறைந்து ரூ.32,488-க்கு விற்பனை ; பெருமூச்சு விடும் நகை பிரியர்கள்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.32,488-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.31 குறைந்து ரூ.4,061-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 காசுகள் குறைந்து ரூ. 51.20-க்கும் கிலோவுக்கு 1200 ரூபாய் குறைந்து ரூ.51,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

தினமும் புதிய உச்சத்தில் தங்கம் விலை

தங்கம் விலை இந்தாண்டு புத்தாண்டு முதல் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் விலை ஏற்றம் என்ற அளவில் தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. இந்த நிலைமை பிப்ரவரி மாதம் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால் தினந்தோறும் தங்கம் விலை அதிகரித்து புதிய சாதனையை படைத்து வந்தது.

9 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,112 உயர்வு


கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் “ஜெட்” வேகத்தில் அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.94 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4166க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.752 அதிகரித்து ஒரு சவரன் 33 ஆயிரத்து 328க்கு விற்றது. தொடர்ச்சியாக கடந்த 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை 9 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,112 அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஒரு சவரன் ரூ.25,600க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரே ஆண்டில் (24ம் தேதி வரை) மட்டும் சவரன் ரூ.7728 அளவுக்கு உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு வாரமாக ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை நேற்று  ஒரே நாளில் சவரனுக்கு ரூ.552 குறைந்தது. இன்றும் சவரன் ரூ.248 குறைந்து ரூ.32,488க்கு விற்பனையாகி வருகிறது. இது நகை வாங்குவோரை சுற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.