May 31, 2020
வர்த்தகம்

கொரோனாவால் ‘அலர்ட்’ ஆன மக்கள் கடன் வாங்க ஆளில்லை சேமிப்பு பெருகிப்போச்சு

புதுடெல்லி: கொரோனாவால் பலரின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. வருவாய் குறைந்ததால், இருப்பதை வைத்து சமாளிக்க வேண்டிய நிலை. அதனால், இருப்பதில் சிக்கனம் செய்து சேமித்து வைப்பதில் பலர் கவனம் செலுத்த துவங்கி விட்டனர் என்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.  வங்கிகளில் கடன் வழங்கல் மற்றும் டெபாசிட் தொடர்பான புள்ளி விவரங்களை ரிசர்வ் வங்கி 2 வாரங்களுக்கு ஒரு முறை வெளியிட்டு வருகிறது. இதில், கடந்த ஜனவரி 31ம் தேதி துவங்கி ஒவ்வொரு 2 வாரத்திலும் கடன் வாங்குதல் மற்றும் டெபாசிட்களில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வந்துள்ளன.

ஜனவரி 31, பிப்ரவரி 28, மற்றும் மார்ச் 27 ஆகிய தேதிகளில் முடிவடைந்த 2 வாரங்களில் கடன் வாங்குவது அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் பிப்வரி 14 உடன் முடிவடைந்த 2 வாரங்களில் கடன் வாங்குவது 63,491 கோடி குறைந்துள்ளது. ஆனால், ஊரடங்கிற்கு பிறகு கடன் வாங்குவது கணிசமாக குறைந்து விட்டதை இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.  மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு ஏப்ரல் 10ம் தேதியுடன் முடிவடைந்த 2 வாரங்களில் 31,562 கோடி, அதன்பிறகு ஏப்ரல் 24 வரையிலான 2 வாரங்களில் 69,340 கோடி, பின்னர் மே 8 வரையிலான 2 வாரங்களில் 21,010 கோடி கடன் வாங்குவது குறைந்துள்ளது.

அதாவது தொடர்ந்து மார்ச் 27க்கு பிறகு ஏப்ரல் 10, ஏப்ரல் 24 மற்றும் மே 8 உடன் முடிவடைந்த 2 வாரங்களில் தொடர்ந்து 3வது முறையாக கடன் வாங்குவது குறைந்துள்ளது. அதாவது, 1,21,912 கோடி சரிந்துள்ளது. அதேநேரத்தில் டெபாசிட்கள் அதிகரித்துள்ளன. கடந்த மே 8ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வங்கி டெபாசிட்களில் முதலீடு 1,27,226 கோடி அதிகரித்துள்ளது. இத்தனைக்கும், ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு அறிவிப்புக்கு பிறகு வங்கிகள் டெபாசிட் வட்டியை குறைத்தன. இருப்பினும் செலவு குறைந்து சேமிப்பு பெருகியதையும், திரும்ப அடைக்க முடியுமோ என்ற தயக்கத்தில் கடன் வாங்குவது குறைந்ததையும் இது காட்டுவதாக வங்கியாளர்கள் தெரிவித்தனர்.