May 31, 2020
வர்த்தகம்

மத்திய அரசு திட்டம் பற்றி ரகுராம் ராஜன் விமர்சனம்: பால், காய்கறி வாங்க பணம் வேண்டும் இலவச தானியம் எப்படி போதும்?

புதுடெல்லி: வெளிமாநில தொழிலாளர்களுக்கு இலவச உணவு, தானியம் மட்டுமே வழங்குவது போதாது. வேலையை இழந்த அவர்களுக்கு பணமும் தேவை என ரகுராம் ராஜன் தெரிவித்தார்.  பொருளாதாரத்தை மீட்க 21 லட்சம் கோடி மதிப்பிலான சலுகை திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இது குறித்து, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியதாவது: இந்திய பொருளாதாரம் பலஆண்டாக வீழ்ச்சியடைந்து வருகிறது. வளர்ச்சி மிக மந்தமாக உள்ளது. இதனை மீட்க நாம் நிறைய நடவடிக்கைகளை மேற்கொ–்ள வேண்டும். சரிவை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்.

 பெரிய நிறுவனங்கள், வங்கிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். இதற்கு ஊக்கத்தொகைதான் உடனடி தேவை. அப்போதுதான் மீண்டு வர முடியும். வெறும் சீர்திருத்த அறிவிப்புகளால் பலனில்லை. பொருளாதாரத்தோடு மக்களையும் காப்பாற்ற வேண்டும். இது மிக முக்கியம். இதை உணர்ந்து அரசு அடுத்த கட்ட ஊக்கத்தொகை சலுகைகளை வழங்காவிட்டால் பொருளாதாரம் மேலும் சரியும்.  கொரோனா ஊரடங்கால் புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 அரசு அறிவித்த இலவச உணவு, தானியங்கள் அவர்களின் தேவையை போக்க போதுமானதல்ல. வெறும் தானியத்தை சாப்பிட்டால் போதாது. காய்கறி, பால், சமையல் எண்ணெய் வாங்க வேண்டும். அதைவிட முக்கியமாக, வாடகை தர வேண்டும். இதற்கு பணம் தேவை. அதை வழங்காமல் உணவு தானியம் வழங்கி என்ன பயன்?.
இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.