Dec 03, 2020
வர்த்தகம்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 320 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 320 குறைந்தது. இதனால் ஒரு சவரன் 38 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது. கடந்த 16ம் தேதி ஒரு சவரன் தங்கம் 38,568க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 17ம் தேதி ஒரு சவரன் 38,432க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம்(18ம் தேதி) ஒரு கிராம் தங்கம் 4,780க்கும், சவரன் 38,240க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலையும் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. கிராமுக்கு 33 குறைந்து ஒரு கிராம் 4,747க்கும், சவரனுக்கு 264 குறைந்து ஒரு சவரன் 37,976க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. அதாவது, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 40 குறைந்து ஒரு கிராம் 4740க்கும், சவரனுக்கு 320 குறைந்து ஒரு சவரன் 37920க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு 64, சவரனுக்கு 512 அளவுக்கும் தங்கம் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.