Jan 24, 2020
ஹாலிவுட் செய்திகள்

சென்னை தண்ணீர் பஞ்சம்... டைட்டானிக் ஹீரோ கவலை

‘சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் இருந்து மழை மட்டும்தான் காப்பாற்ற முடியும்’ என்று, ‘டைட்டானிக்’ படத்தின் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ கவலை தெரிவித்துள்ளார். 1997ல் வெளியாகி உலக சாதனை படைத்த ஹாலிவுட் படம், ‘டைட்டானிக்’. இதில் ஹீரோவாக நடித்தவர், லியோனார்டோ டிகாப்ரியோ. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் குறித்து வருத்தப்பட்டு பதிவு செய்திருக்கிறார்.

அதில் கூறியிருப்பதாவது: மழை மட்டும்தான் சென்னையை காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. கிணறுகள் முழுவதுமாக வற்றிவிட்டன. நகரமே தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள சென்னை நகரம்தான் இந்த சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. 4 பெரிய நீர்த்தேக்கங்கள் முற்றிலும் வறண்டு கிடக்கிறது. இதனால், தண்ணீருக்காக அவசர கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு லாரியில் விநியோகிக்கும் தண்ணீரைப் பெற, குடியிருப்புவாசிகள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறையால் ஓட்டல்கள், விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. அதிகாரிகள் நீரை பெறுவதற்கான மாற்றுவழிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், மக்கள் மழைக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கிணற்றில் இருந்து பெண்கள் நீர் இறைக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். லியோனார்டோ டிகாப்ரியோவை இன்ஸ்டாகிராமில் உலகம் முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கின்றனர். தண்ணீர் பஞ்சம் குறித்து கோலிவுட்டில் பலரும் பேசாத நிலையில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை தண்ணீர் பஞ்சம் பற்றி கவலையோடு கருத்து தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.