Dec 07, 2021
ஹாலிவுட் செய்திகள்

ஹாலிவுட்டை ஆளும் ரஷ்ய அழகி!

நீ ஓர் உளவாளி ஆறேழு வயது குழந்தைக்கு ‘உளவாளி’ என்கிற சொல்லின் அர்த்தம் முழுமையாக புரியுமா என்று தெரியவில்லை. ஆனால், சுற்றியிருப்பவர்கள் ‘உளவாளி’ என்று சொல்லும்போது அவர்களது உடல்மொழி வெளிப்படுத்தும் வெறுப்பின் மூலம், வசைச்சொல்லாக பயன்படுத்துகிறார்கள் என்பது மட்டும் மில்லாவுக்கு புரிந்தது. கம்யூனிஸ்டுகள் எல்லோரும் கொலைகாரர்கள். நீ ஒரு கம்யூனிஸ்டு பள்ளிக்கு வேனில் வரும்போது பக்கத்து சீட்டு பெண் அடிக்கடி சொல்வாள். உளவாளி, கம்யூனிஸ்ட்... இதற்கெல்லாம் என்ன அர்த்தமென்று தெரியவில்லை. ஆனால், இங்கே அத்தனை பேருமே தன்னையும், தன் குடும்பத்தையும் வெறுக்கிறார்கள் என்று மட்டும் புரிந்துகொண்டாள்.

நானும் உங்களை மாதிரி வெள்ளையாகத்தானே இருக்கிறேன். என்னை மட்டும் ஏன் எல்லாரும் திட்டுகிறார்கள்? டீச்சரிடம் கேட்டாள் மில்லா.
ஏனென்றால் நீ ரஷ்யாவில் பிறந்தவள். இது அமெரிக்கா. அமெரிக்கர்கள் ரஷ்யாவை வெறுப்பவர்கள். புரியலை டீச்சர். அப்போன்னா நான் வேறயா? கண்கலங்கி கேட்ட குழந்தையை கட்டிப்பிடித்துக் கொண்டார் டீச்சர். இவளுக்கு உலக அரசியலை எப்படி புரியவைப்பது? பனிப்போர் என்று சொன்னால் இந்த குழந்தைக்கு என்னவென்று தெரியும். பாழாய்ப்போன அரசியல்வாதிகள் உலக மனிதர்களை பாகுபடுத்தி, தங்கள் பிழைப்புவாதத்துக்காக இரத்தம் குடிக்கும் ஓநாய்களாய் மாறிப்போன கொடுமையை இவளுக்கு எப்படி உணரவைக்க முடியும்?

தன்னைச் சுற்றி சதாநேரமும் உமிழப்படும் வெறுப்புகளுக்கு இடையேதான் வளர்ந்தாள் மில்லா. அதாவது மில்லா ஜோகோவிச். உலகப் புகழ்பெற்ற ‘ரெசிடெண்ட் ஈவில்’ திரைப்படத் தொடரின் நாயகி ஆலிஸ் என்றால் உங்களுக்கு சுலபமாக அடையாளம் தெரியும்.1975ல் உக்ரைனில் பிறந்தார் மில்லா. உக்ரைன் அப்போது சோவியத் ரஷ்யாவுக்குள் இருந்தது. அப்பா ஒரு மருத்துவர், மாண்டிநீக்ரோவைச் சேர்ந்தவர். அம்மா நடிகை, ரஷ்யா. அரசியலால் அநியாயத்துக்கும் அலைக்கழிக்கப்பட்ட குடும்பம். மில்லா ஜோகோவிச்சின் தாத்தா, மாண்டிநீக்ரோ அரச குடும்பத்தின் பாதுகாப்பு அதிகாரி. ஒரு குற்ற விசாரணையின் போது, தன்னுடைய நண்பருக்கு சாதகமாக விசாரித்தார் என்று தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டார். கைது அச்சத்தில் அல்பேனியாவுக்கு தப்பினார். பின்னரே உக்ரைனில் இருக்கும் கீவ் நகருக்கு வந்தார்.

மில்லாவுக்கு ஐந்து வயதாக இருந்தபோது, ஏதோ சில அரசியல் காரணங்களால் மீண்டும் அவர்களது குடும்பம் இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. லண்டனுக்கு போனார்கள். அங்கிருந்து அமெரிக்காவுக்கு தப்பினார்கள். சொந்த நாட்டிலும் துரோகிகள், அடைக்கலம் நாடி வந்த தேசத்திலும் உளவாளிகள் என்று மில்லாவின் குடும்பம் முத்திரைகளைச் சுமந்து வாழவேண்டிய அவலத்துக்கு உள்ளானது. இதனாலேயே மில்லா தான் யாரென்கிற அடையாளச் சிக்கலுக்கு உள்ளானார்.பிற்பாடு புகழ்பெற்ற பிறகு ஒரு பேட்டியில் தன்னுடைய தேச அடையாளமென்று, ‘ரஷ்யன், அமெரிக்கன், செர்பியன், உக்ரேனியன்’ என்று கலந்துகட்டி சொன்னார். அவருடைய மத அடையாளம் குறித்த கேள்விக்கும் ட்விட்டரில், நான் பிறப்பால் ருஷ்ய பழமைவாத மதத்தைச் சேர்ந்தவள்.

ஆனால், அன்பையும் ஆன்மீகத்தையும் கடவுளின் அருளையும் உணரக்கூடிய எந்த தேவாலயத்தையும் வழிபடுவேன் என்று பதிலளித்தார்.
அமெரிக்காவில் முதலில் சாக்ரமெண்டோ நகரில் இருந்தவர்கள் பின்னர் லாஸ்ஏஞ்சல்ஸுக்கு குடிபெயர்ந்தார்கள். அந்நகரில் இருந்த எக்செல்ஸியர் ஹைஸ்கூலில்தான் மில்லா படித்தார். அந்தக் காலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. மருத்துவரான அவருடைய அப்பாவுக்கு சமையல் வேலைதான் கிடைத்தது. அதே வீட்டில் அம்மாவுக்கு பாத்திரங்களைக் கழுவி, வீட்டைப் பெருக்கும் ஹவுஸ்கீப்பிங் பணி. ஹாலிவுட் இயக்குனர் டே பால்மா (ஸ்கார்ஃபேஸ், மிஷன் இம்பாஸிபிள் படங்களின் இயக்குநர்) வீட்டில்தான் வேலை செய்தார்கள்.

சொந்த நாட்டில் செல்வாக்காக இருந்த குடும்பம், குடியேறிய நாட்டில் வறுமையில் சீரழிந்தது.மனக்கொந்தளிப்பான இந்த சூழலில், கூட்டத்தில் யாரும் தன்னை சேர்த்துக் கொள்வதில்லை என்பதால், தான் மட்டுமே வசிக்கக்கூடிய ஒரு கற்பனை உலகத்தை மில்லா சிருஷ்டித்தார். அந்த உலகில் அமெரிக்கா இல்லை. ரஷ்யா இல்லை. பனிப்போர் இல்லை. மனிதர்கள் அத்தனை பேரும் அன்பானவர்கள். யாரும் ஒருவரை ஒருவர் உளவாளி என்றோ, துரோகி என்றோ தூற்றிக் கொள்ள மாட்டார்கள். தனிமையே இனிமை என்று எப்போதும் தனித்து இருந்த மில்லா வெகுவிரைவாக ஆங்கிலம் கற்றுத் தேர்ந்தார். தன்னுடைய ஆங்கிலத்தில் ரஷ்யவாடை இருக்கக்கூடாது என்று மெனக்கெட்டார.

அப்போதெல்லாம் மில்லாவுக்கு அம்மாவே துணை. ரஷ்யாவில் பிரபலமான நடிகையாக விளங்கிய அம்மா, மகளை கலைத்துறையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று விரும்பினார். இசை, நடனம், நடிப்பு என்று தனக்குத் தெரிந்த வித்தைகளை மொத்தமாக கற்றுக் கொடுத்தார். ரிச்சர்ட் ஏவ்டன் என்றொரு உலகப் புகழ்பெற்ற புகைப்பட நிபுணர். ‘ரெவலான்’ அழகுப் பொருட்களுக்கு விளம்பரம் செய்ய ஊர் ஊராகப் போய் மாடல்களை பார்த்துக் கொண்டிருந்தார்.  மாடலிங் செய்ய சம்மதமா? நிறைய காசு கிடைக்கும் என்றால் சரி என்றார் பதினோரு வயது மில்லா ஜோகோவிச். ஏனெனில் அப்போது அம்மாவும், அப்பாவும் பிரிந்துவிட்டார்கள்.

வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் அம்மாவை விவாகரத்து செய்திருந்தார் அப்பா.‘உலகின் மறக்க முடியாத பெண்கள்’ என்று தலைப்பிட்டு ரெவலான் வெளியிட்ட தொடர்விளம்பரங்களில் மில்லாவும் இடம்பெற்றார். அடுத்த ஆண்டே இத்தாலிய பத்திரிகை ஒன்று அட்டைப்படத்தில் மில்லாவின் முகத்தை வெளியிட்டது. பன்னிரண்டு வயதிலேயே படிப்பு போதும் என்று முடிவெடுத்துவிட்டார் மில்லா. ‘தி ஃபேஸ்’, ‘வாக்’, ‘காஸ்மோபோலிட்டன்’ என்று முன்னணிப் பத்திரிகைகளின் அட்டைப்படங்கள் இவர் முகத்தால் அலங்கரிக்கப்பட்டன. 1994ல் தொடங்கி 2004க்குள் பத்து ஆண்டுகளில் நூறுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளின் அட்டைப்படங்களை ஆக்கிரமித்த சாதனைக்கு இவர் சொந்தக்காரர் ஆனார். உலகிலேயே அதிகம் சம்பாதித்த மாடலாகவும் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையால் அறிவிக்கப்பட்டார்.

மாடலிங்கில் தடம் பதித்த அதே காலக்கட்டத்தில் டெலிஃபிலிம், சீரியல் என்று நடிப்பு வாய்ப்புகளும் வந்தன. தொடக்க காலத்தில் சினிமாவிலும் துணைப் பாத்திரங்களில் அவ்வப்போது தோன்ற ஆரம்பித்தார். பதினைந்து வயதில் ‘ரிட்டர்ன் டூ ப்ளூ லகூன்’ படத்தில் ஹீரோயின். முழு நிர்வாணக் காட்சி ஒன்று இருக்கிறது என்று தெரிந்தும், துணிச்சலாக அந்த பாத்திரத்தை ஏற்றார். சினிமாவை விட மாடலிங்கிலும், இசையிலும் மில்லாவுக்கு அப்போது ஆர்வம் அதிகமாக இருந்தது. எனவே ஹாலிவுட்டை விட்டு ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்தார்.சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 1997ல் ப்ரூஸ்வில்லிஸோடு ‘தி ஃபிப்த் எலிமெண்ட்’ படத்தில் நடித்தார். செம்ம பிரேக்.

ஓர் ஆக்‌ஷன் ஹீரோயினாக ஹாலிவுட்டில் ஸ்டெடி ஆனார். இதனாலேயோ என்னவோ படத்தின் இயக்குனரோடு லவ்ஸ் ஆகி கல்யாணமும் செய்துகொண்டார். மில்லா ஜோகோவிச்சை விட பதினாறு வயது அதிகமான அவரது கணவர் லைக் பெஸ்ஸனுக்கும் அவருக்கும் ஒத்துப் போகவில்லை. இரண்டே ஆண்டுகளில் விவாகரத்தில் முடிந்தது இந்தத் திருமணம். ‘தி மெசஞ்சர் : தி ஸ்டோரி ஆஃப் ஜோன் ஆஃப் ஆர்க்’ படத்தில் டைட்டில் ரோல். போர்க்களக் காட்சிகளில் பின்னி பெடலெடுத்தார். 2002ல் ‘ரெசிடெண்ட் ஈவில்’ என்கிற வீடியோ கேம், திரைப்படமாக உருவெடுக்க அந்த பாத்திரத்துக்காக கராத்தே, கிக்பாக்ஸிங் மற்றும் ஏராளமான சண்டைக்கலைகளில் இவர் தேற வேண்டியதாயிற்று.

ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் ‘ரெசிடெண்ட் ஈவில்’ தொடர் திரைப்படங்கள்தான் ஜோகோவிச்சை உலகளவில் பிரபலமாக்கின. இதுவரை ஐந்து பாகங்களில் நடித்துவிட்டார். இப்போது ஆறாவது பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இரண்டு திருமணங்கள் முறிந்துவிட மூன்றாவதாக பால் ஆண்டர்சனை (இவர்தான் ரெசிடெண்ட் ஈவில் இயக்குனர்) கட்டிக்கொண்டு இரண்டு குழந்தைகள் பெற்று நிம்மதியாக இருக்கிறார். சமீபத்தில் பேசிய பத்திரிகையாளர் ஒருவர், உங்க எதிர்காலம் என்னவாக இருக்கும்? என்று கேட்டார்.மில்லா ஜோகோவிச்சின் பதில்: எல்லோருடைய எதிர்காலமும் சாவுதான். உங்களுக்கும், எனக்கும்கூட உறுதியாக சொல்லக்கூடிய எதிர்கால சம்பவம் ஒன்று உண்டென்றால் அதுமட்டும்தான்!