Dec 01, 2020
ஹாலிவுட் செய்திகள்

ஆன்லைன் மூலம் படிப்பு ஏழை மாணவர்களுக்கு செல்போன் கொடுத்த நடிகர்

ஆன்லைன் மூலம் படிப்பதற்கு ஏழை மாணவர்களுக்கு செல்போன்களை வாங்கிக் கொடுத்துள்ளார் நடிகர் உன்னி முகுந்தன். தமிழில் பாக்மதி படத்தில் நடித்தவர் உன்னி முகுந்தன். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறப்பது தள்ளிப்போகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முறை அறிமுகம் செய்துள்ளனர். இதன்படி பல பள்ளிகள் ஆன்லைனில் பாடங்களை நடத்தி வருகின்றன. கேரளாவிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன. ஏழை மாணவர்கள் பலர் வீட்டில் ஆண்ட்ராய்டு செல்போன் இல்லாததால் படிப்பை தொடர முடியவில்லை என உன்னி முகுந்தன் அறிந்தார். இதையடுத்து ஏழை மாணவர்கள் 30 பேருக்கு அவர், ஆண்ட்ராய்டு செல்போன்களை வாங்கிக் கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன் மாணவர்கள் சிலர், கால்பந்து ஆட்டத்தில் பங்கேற்க விளையாட்டு உபகரணங்கள் கேட்டபோதும் உன்னி முகுந்தன் அவர்களுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.