Jun 02, 2020
இந்தியா

ஆந்திராவில் ஒரே நாளில் 43 பேருக்கு பாதிப்பு

திருமலை: ஆந்திராவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை  373 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தபோது 330 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதும் 43 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 43 பேரும் டெல்லியில் நடைபெற்ற மத வழிபாட்டில் பங்கேற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடப்பா மாவட்டத்தில் 15, மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 13, சித்தூர் மாவட்டத்தில் 5, பிரகாசம் மாவட்டத்தில் 4, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 2, நெல்லூர் மாவட்டத்தில் 2, கிருஷ்ணாவில் 1 மற்றும் விசாகப்பட்டினத்தில் 1 என மொத்தம் 43 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி நிஜாமுதீன் மத வழிபாடு சென்று  வந்தவர்களில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த மாவட்டங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அமைச்சர்கள் நிஜாமாபாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் குறித்த பட்டியலை வைத்து அவர்கள் அனைவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். டெல்லியில் நடைபெற்ற மத வழிபாட்டில் பங்கேற்க ஆந்திராவிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்று வந்ததாக தெரிகிறது. ஆனால் இதுவரை 700 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களும் தாங்களாக முன்வந்து ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்களாகவே முன்வந்து அரசின் இலவச இணைப்பான 104க்கு போன் செய்தால் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடியாக உங்கள் வீட்டிற்கே வந்து உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்கள். பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும். எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று துணை முதல்வர் அம்ஜத் பாஷா கேட்டுக்கொண்டுள்ளார்.