Mar 05, 2021
அரசியல்

அண்ணா அறிவாலயத்தில் திமுக-காங். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: பிப். 25ம்தேதி நடக்கிறது; காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- காங்கிரஸ் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை வரும் 25ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் மக்களிடம் குறை கேட்டு மனுக்களை பெற்று வருகிறார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் தொடர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இம்மாத இறுதியில் தென்மாவட்டங்களில் அவரது பிரசார சுற்றுப்பயணம் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்துள்ளது.

இது தொடர்பாக விரைவில் திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். இந்நிலையில், ஓரிரு வாரங்களில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை விரைவில் முடித்து பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் முடிவெடுத்துள்ளது. அதன்படி, திமுக முதலில் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை வரும் 25ம்தேதி காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளதா காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன்சாண்டி அன்றைய தினம் தமிழகம் வருகிறார். அவருடன் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவும் வருகிறார். இவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குகின்றனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, திமுக மூத்த தலைவர்களும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும், எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.