Mar 05, 2021
அரசியல்

சசிகலா குறித்து விமர்சிக்க அமைச்சர்கள் தொடர்ந்து தயக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் அதிர்ச்சி

சென்னை: திருமதி சசிகலா குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க அமைச்சர்கள் தொடர்ந்து தயங்குவது முதல்வர் மற்றும் துணை முதல்வரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கடந்த மாதம் விடுதலையான சசிகலா இந்த மாத துவக்கத்தில் சென்னை வந்தார். பெங்களுருவில் இருந்து வழி நெடுகிலும், திருமதி சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர். தற்போது சென்னை தியாகராய நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருக்கும் அவர் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைத்து கொள்ள வாய்ப்பே இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில் அமைச்சர்கள் சிலர் சசிகலா குறித்து வெளிப்படையாக விமர்சிக்க முன்வராதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிமுக, அமமுக, இணைப்பு குறித்து சுவாமி மலை முருகன் தான் கூற வேண்டும் என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ஒதுங்க, அமைச்சர் செல்லூர் ராஜூவோ ஆளவிடுங்கப்பா என்று நழுவி உள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சண்முகம், ஜெயக்குமார், மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி ஆகியோர் திருமதி சசிகலாவுக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், அமைச்சர் செல்லூர் ராஜூவும், அவ்வாறு எதிர்க்க முன்வராதது மேலிட தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், தொண்டர்களை குழப்பத்தில் ஆழத்தி உள்ளது.