Dec 07, 2021
பிரசவ கால ஆலோசனை

கர்ப்பிணிக்கு டெங்கு வந்தால்...

நன்றி குங்குமம் டாக்டர்

டெங்கு காய்ச்சல்....


இந்த இரண்டு வார்த்தைகள் தமிழகத்தையே குலை நடுங்க வைத்துள்ளது. கடந்த சில மாதங்களில் மாவட்டம் தவறாமல் டெங்கு காய்ச்சல் பரவியதில், பல்லாயிரக்கணக்கான பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பேர் பலியாயினர். சாதாரணமானவர்களின் கதியே இப்படி என்றால், கர்ப்பிணிகளுக்கு டெங்கு வந்தால் என்ன செய்வது?

எது டெங்கு காய்ச்சல்?


டெங்கு(Dengue) எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் வருகிறது டெங்கு காய்ச்சல். இந்தக் கிருமிகளில் மொத்தம் 4 வகைகள் உள்ளன. ஏதேனும் ஒரு வகை நம்மைத் தாக்கினால் போதும், டெங்கு காய்ச்சல் வந்துவிடும். இந்தக் கிருமிகள் கொசுக்கள் மூலம் மக்களுக்குப் பரவுகின்றன. ஏடஸ் எஜிப்தி(Aedes Aegypti) எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது டெங்கு வருகிறது. பொதுவாக, கொசுக்கள் என்பவை சாக்கடை, அசுத்தமான நீர்நிலைகள், நீண்டகாலம் தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவற்றில் வாழ்வது வழக்கம்.

ஆனால், டெங்கு கொசுக்களோ சுத்தமான நீர்நிலைகளில் மட்டுமே வளரக் கூடியவை. மற்ற கொசுக்கள் பெரும்பாலும் இரவில்தானே கடிக்கும்? ஆனால், டெங்கு கொசுக்களோ பகலில்தான் கடிக்கும். அதுவும் பெண் கொசுதான் கடிக்கும். காரணம், அது முட்டையிடுவதற்கு நம் ரத்தத்தில் உள்ள புரதம் தேவைப்படுகிறது. தற்போது டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களின் வாழ்நாள் அதிகரித்துள்ளது. இவற்றின் சராசரி ஆயுட்காலம் 20-லிருந்து 40 நாட்களாக அதிகரித்துள்ள காரணத்தால், கொசுக்களை அழிப்பது என்பது சிரமமாக உள்ளது. இதுதான் சமீபகாலமாக டெங்கு வேகமாக பரவுவதற்கு முக்கியக் காரணம்.

அறிகுறிகள்


கொசு கடித்த ஒரு வாரத்தில் நோய் தொடங்கிவிடும். குழந்தைகள், பெரியவர்கள் என வயது வேறுபாடின்றி அனைவரையும் இந்த நோய் தாக்கக்கூடியது. பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் டெங்கு காய்ச்சல் அவர்களை அவ்வளவாக பாதிப்பதில்லை. இந்தக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே. என்றாலும், இன்றைய தொற்றுநோய் காலத்தில், கர்ப்பிணிகளுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அப்போது கர்ப்பிணியை அதிக கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம். திடீரென்று கடுமையான காய்ச்சலுடன் நோய் ஆரம்பிக்கும்.

தொடர்ச்சியான வாந்தி, வயிற்றுவலி, தலைவலி, பின்கண் வலி, உடல்வலி, மூட்டுவலி, களைப்பு, இருமல் ஆகிய அறிகுறிகள் சேர்ந்துகொள்ளும். மூட்டுவலி அதிகமாகும். எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள். அடுத்து உடலில் அரிப்பு இருப்பதோடு, சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். டெங்கு வைரஸ் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், அவற்றில் துளை விழுந்து ரத்தத்தைக் கசியவிடும். இதன்விளைவால் ஏற்படும் சிவப்புப் புள்ளிகளே இவை.

ஆபத்து எப்போது?

பெரும்பாலானவர்களுக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) உருவாகும். இவர்கள்தான் ஆபத்து மிகுந்தவர்கள். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்க சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித்துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.

டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டுகள் ஆகியவற்றில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிரிழப்பு ஏற்படுவதுண்டு.

என்ன பரிசோதனைகள்?

இந்த நோயைத் தொடக்கத்திலேயே சரியாகக் கணிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஆரம்ப கட்ட அறிகுறிகள் வைரஸ் நோய்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால் உடனே நோயை உறுதி செய்ய இயலாது. என்எஸ்1 ஆன்டிஜென் (NS1 antigen) பரிசோதனை, டெங்கு ஐஜிஎம் மற்றும் ஐஜிஜி (Dengue IgM, IgG) பரிசோதனைகள், எலிசா ஐஜிஎம் (Elisa IgM), பி.சி.ஆர். (PCR) ஆகிய பரிசோதனைகளில் டெங்கு பாதிப்பு உள்ளது தெரிய வரும். இவற்றில் 100% நோயை உறுதி செய்வதற்கு எலிசா பரிசோதனையும் பி.சி.ஆர். பரிசோதனையும் உதவுகின்றன.

இவை தவிர, ஹெமட்டோகிரிட் (Haematocrit - HCT) எனும் ரத்தப் பரிசோதனையும் தட்டணுக்கள் (Platelets) பரிசோதனையும் முக்கியமானவை. ஹெமட்டோகிரிட் இயல்பான அளவு 36 - 38 சதவீதம். காய்ச்சல் ஆரம்பித்த முதல் மூன்று நாட்களில் இந்த அளவு சரியாக இருக்கும். அதற்கடுத்த இரண்டு நாட்களில் இதன் அளவு அதிகரித்தால், டெங்கு என்று கணிக்கப்படும். சிகிச்சையைத் தொடங்குவதற்கும் நோய்க் கட்டுப்படுகிறதா என்று கணிப்பதற்கும் இது உதவுகிறது.தட்டணுக்களின் சரியான அளவு 1.5 முதல் 4.5 லட்சம்/டெ.லி.வரை இருக்க வேண்டும்.

டெங்கு ஆரம்பித்த முதல் இரண்டு நாட்களுக்கு இது சரியாக இருக்கும். அதற்கடுத்த மூன்று நாட்களில் இதன் அளவு குறையத் தொடங்கி ஆறாம் நாளில் மிகவும் குறைந்துவிடும். ஆனால், ஏழாம் நாளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துவிடும். டெங்கு நோயாளிக்கு ரத்தம் அல்லது தட்டணுக்களைச் செலுத்த வேண்டுமா எனத் தெரிந்துகொள்வதற்கு இது உதவுகிறது. டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு இது 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். அப்போது அவருக்கு ரத்தம் அல்லது தட்டணுக்கள் செலுத்தப்பட வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு என்ன ஆபத்து?


டெங்கு மற்றவர்களுக்கு ஏற்படும்போது, நூறில் 96 பேருக்கு நோய் சரியாகிவிடும்; 4 பேருக்கு மட்டுமே ஆபத்து நெருங்கும். ஆனால், கர்ப்பிணிகளுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுமானால், பாதிப்பேருக்கு ஆபத்தான விளைவுகள் உண்டாகும். சரியான நேரத்தில், சரியான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே அந்த  ஆபத்துகளிலிருந்து தப்பிக்கலாம்.

டெங்கு அதிர்ச்சி நிலை உருவாவது, உடலில் பல பகுதிகளில் ரத்தம் கசிவது, கருச்சிதைவு ஏற்படுவது, குறைப் பிரசவம் ஆவது, கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்படுவது, ரத்த அழுத்தம் குறைந்து போவது, சிசுவுக்கும் நோய் பரவுவது, குறைந்த எடையில் குழந்தை பிறப்பது, சிசு மரணம் எனப் பலதரப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. எனவே, கர்ப்பிணிக்கு காய்ச்சல் ஏற்பட்டால், சிகிச்சைக்குத் தாமதிக்கக் கூடாது. சுய சிகிச்சை செய்யாமலும், போலி மருத்துவர்களிடம் சிகிச்சைக்குச் செல்லாமலும், முறைப்படி சிகிச்சை பெற வேண்டும். மகப்பேறு மருத்துவரும் பொது மருத்துவரும் கூட்டாக சிகிச்சை அளித்தால் நல்லது.
 
என்ன சிகிச்சை?

டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் குறைக்கவும், உடல்வலியைப் போக்கவும் மட்டுமே மருந்துகள் தரப்படும். நோய் மிதமாக இருந்தால், வீட்டிலேயே ஓய்வெடுக்கலாம். உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடுகட்ட, அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; உப்பும் சர்க்கரையும் கலந்த கரைசல், பால், மோர், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

அதிர்ச்சி நிலையால் மயக்கம் ஏற்படுபவர்களுக்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் ஏற்றப்பட வேண்டும். இன்னும் சிலருக்கு தட்டணுக்கள் மோசமாக குறைந்துவிடும். அதை ஈடுகட்ட தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்தப்பட வேண்டும் இதற்கு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். முக்கியமாக, கர்ப்பிணிகளுக்கு நீரிழப்பு அதிகமாக இருக்கும் என்பதால், அது சிசுவையும் பாதித்துவிடும்.

எனவே, நீரிழப்பை மிக கவனமாகச் சரி செய்து. ரத்த அழுத்தம் சரியாக பேணப்பட வேண்டும். தட்டணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தக்கசிவுக்கான ரத்தப் பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொண்டு, டெங்கு தீவிரமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றில் பாதிப்புகள் இருக்குமானால், அவற்றுக்குரிய சிறப்பு சிகிச்சைகளும் தேவைப்படும்.