Dec 07, 2021
பிரசவ கால ஆலோசனை

குழந்தையின்மை... எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?

நன்றி குங்குமம் டாக்டர்

நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது குழந்தையின்மை பிரச்னை. இள வயதுக்காரர்கள் முதல் 50 வயதைக் கடந்தவர்கள்கூட இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். எனவே, குழந்தையின்மைக்கானஅடிப்படையையும், காரணங்களையும் அறிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொருவருக்குமே அவசியமாகிறது.

அவற்றைப் பற்றி விளக்குகிறார்மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

திருமணமாகி முதல் 6 மாதங்கள்முதல் 1 வருடம் வரை முறையாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலும் தாம்பத்திய உறவு மேற்கொண்டும் கருத்தரிக்காத நிலை ஏற்பட்டால் குழந்தையின்மை என்று சந்தேகப்படுகிறோம். இந்த பிரச்னை வயதைப் பொறுத்து மாறுபடும்.

அறிகுறிகள்...

மாதவிலக்கு சுழற்சியில் அசாதாரணமாறுபாடுகள், அதிகளவிலான ரத்தப் போக்கு அல்லது மிகக் குறைவான ரத்தப்போக்கு, முறைதவறிய மாதவிலக்கு, ஒவ்வொரு மாதவிலக்கும் இத்தனைநாட்களில் நிகழும் என்கிற கணக்கின்றி வருவது, பூப்பெய்தாத நிலை, திடீரென மாதவிலக்கு நின்றுபோவது, மாதவிலக்கின்போது கடுமையானவலி, இடுப்பு வலி, முதுகுவலியுடன்,கடுமையான தசைப்பிடிப்பும் சேர்ந்துகொள்வது. இவையெல்லாம் குழந்தையின்மைக்கான முக்கிய காரணிகள்.

இவையும் காரணங்களாக இருக்கலாம்!

எண்டோமெட்ரியாசிஸ்,  பிசிஓடி, ஒன்றுக்கு மேலான அபார்ஷன், வயதுக்கு முந்தைய மெனோபாஸ், ஒழுங்கற்ற வடிவத்திலுள்ள கருப்பை, கட்டிகள், ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் சரியாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளுக்குள்ளேயே தேங்கிவிட்ட திசுக்கள் மற்றும் தொற்றுகள்.

சருமத்தில் தென்படும் மாற்றங்கள்

குழந்தையின்மைக்கு பெண்களிடம்காணப்படும் காரணிகளில் சில நேரம், ஹார்மோன் சமநிலையின்மையும் முக்கியமாக இருக்கலாம். ஒருவேளை அது காரணமாக இருந்தால் அந்த நிலையில் கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படலாம்.அதிகளவிலான பருக்கள், பாலியல் ஈடுபாட்டில் மாறுதல்கள், உதடுகளுக்கு மேல், தாடையில் உடலின் பல பகுதிகளிலும் தேவையற்ற ரோம வளர்ச்சி, அளவுக்கதிகமான முடி உதிர்வுமற்றும் கூந்தல் மெலிந்துகொண்டே போவது, அதிக எடை.

இதர அறிகுறிகள்

கர்ப்பமே தரிக்காத நிலையில் மார்பகங்களில் இருந்து வெள்ளைநிற திரவக்கசிவு, தாம்பத்திய உறவின்போது வலி.

ஆண்களிடம் காணப்படும் அறிகுறிகள்

குழந்தையின்மைக்கான காரணங்களில் சம அளவு ஆண்களிடமும் காணப்படுகின்றன. ஆனால், அறிகுறிகளை அவர்கள் பெரும்பாலும் அலட்சியப்படுத்தி விடுவதால் சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சைகள் மேற்கொள்வதில்லை.முடி வளர்ச்சியில் திடீர்மாறுதல்கள், பாலியல் வேட்கையில் மாற்றம், பால் உறுப்பில் வலி, வீக்கம் மற்றும் அந்தப் பகுதியில் வித்தியாசமான மாற்றங்களை உணர்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால்அவற்றை குழந்தையின்மைக்கான அறிகுறிகளாகக் கருதி, மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
எப்போது மருத்துவரைப் பார்க்க வேண்டும்?

35 வயதுக்குக் கீழான பெண்கள்

என்றால் திருமணமாகி ஒரு வருடம் வரை காத்திருக்கலாம். 35 வயதுக்கு மேலானவர்கள் 6 மாதங்களிலேயே மருத்துவரைப் பார்க்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின்பேரில் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். ஆண்களுக்கு உயிரணுக்களின்எண்ணிக்கை மற்றும் தரத்தை அறியும் சோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் பின்னணி, வயது, பரிசோதனை முடிவுகள் போன்றவற்றை வைத்து குழந்தையின்மைக்கான சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.இந்தத் தகவல்களை மருத்துவரிடம் மறைக்காமல் சொல்லுங்கள்

* நீங்கள் எதற்காகவாவது மருந்து, மாத்திரைகள், சப்ளிமென்ட்டுகள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அவற்றின் விவரங்கள், அவை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளப்படுபவையா அல்லது நீங்களாகவே சாப்பிடுபவையா?
* எத்தனை நாட்கள் இடைவெளியில்,மாதத்தின் எந்தெந்த நாட்களில் பாதுகாப்பற்ற முறையில் உறவு கொள்கிறீர்கள்?
* உடல்ரீதியாக நீங்கள் உணரும்மாற்றங்கள்.
* கடந்த காலத்தில் உங்களுக்கு வயிறு மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பாக ஏதேனும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டனவா?
* ரேடியேஷன் அல்லது கீமோதெரபிஎடுத்துக்கொண்டதுண்டா?
* புகை, மது மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் உண்டா?
* பால்வினை தொடர்பான நோய்கள்உள்ளனவா?
* தைராய்டு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற ஏதேனும் உண்டா?

- ராஜி