Dec 01, 2021
கர்ப்பகால கவனிப்பு

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு

நன்றி குங்குமம் டாக்டர்


மாதவிலக்கு நின்றுபோவதுதான் கர்ப்பத்தின் முதல் அறிகுறி. அப்படி இருக்கும்போது கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் எந்த கர்ப்பிணிக்குத்தான் பயம் ஏற்படாது? ‘ரத்தப்போக்கு காணப்பட்டாலும் வயிற்றில் குழந்தை நார்மலாகத்தான் இருக்கிறது’ என்று மகப்பேறு மருத்துவர் நம்பிக்கையாகச் சொன்னாலும், இந்த ரத்தப்போக்கு ஏன் ஏற்படுகிறது? என்ற கேள்வி மனசுக்குள் குடைந்து கொண்டிருக்கும். பிரசவத்திலோ, குழந்தையின் ஆரோக்கியத்திலோ குறை ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்ற பதற்றமும் பற்றிக்கொள்ளும். இதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்...

முதல் டிரைமெஸ்டரில் ரத்தப்போக்கு

கருத்தரித்த 10 முதல் 14 நாட்களுக்குள், கருமுட்டை கருப்பையின் உட்சுவரில் தன்னைப் பதித்துக் கொள்ளும். அப்போது சிலருக்கு லேசான ரத்தக்கசிவு ஏற்படும். இதை மாதவிலக்கு எனத் தவறாக எண்ணிக்கொண்டு, தாம் கர்ப்பம் அடைந்திருப்பதையே உணராமல் இருப்பவர்களும் உண்டு. இன்னும் சிலர் கருச்சிதைவு ஆகிவிட்டது எனப் பதறிப்போவதும் உண்டு. கர்ப்ப காலத்தில் கருப்பையின் வாய்ப்பகுதிக்கு அதிகமாக ரத்தம் செல்லும்.

எனவே, அந்தப்பகுதி ரத்தம் கோர்த்துக் கொண்டதுபோல் சிவப்பாகவும், மிருதுவாகவும் காணப்படும். சிலருக்கு அப்பகுதியில் சிறுகீறல்கள்(Erosion Cervix) காணப்படும். அப்போது, தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால் அல்லது மருத்துவர் விரல் விட்டுப் பரிசோதனை செய்தால், லேசான ரத்தக்கசிவு இருக்கும். இதற்குப் பயப்படத் தேவையில்லை. இது இயல்பாகவே சரியாகிவிடும்.

கருச்சிதைவு காரணமா?

முதல் டிரைமெஸ்டரில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் அது கருச்சிதைவின் காரணமாகவும் இருக்கலாம். 100 பேரில் 20 பேருக்கு இப்படி ஏற்படுகிறது. இவர்
களில் பெரும்பாலும் முதல் 12 வாரங்களில் ஏற்படுகிறது. அப்போது, மருத்துவரிடம் சென்று, வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்துப்பார்த்து, குழந்தையின் இதயத்துடிப்பு கேட்கிறதா என்பதை அறிந்து, கருச்சிதைவைக் கணிக்க வேண்டும். இதயத்துடிப்பு  இல்லை என்றால் கருச்சிதைவு ஆகிவிட்டது என்று பொருள். இதயத்துடிப்பு இருந்தால் கர்ப்பத்தில் பிரச்னை இல்லை; அப்போது ரத்தப்போக்குக்குக் காரணம் அறிந்து, சிகிச்சை பெற வேண்டும்.

புற கர்ப்பம் காரணமாகும்!

சிலருக்கு கருமுட்டை கருப்பையில் பதியாமல், கருக்குழாயில்(Fallopian tube) பதிந்து வளரத் தொடங்கிவிடும். இதைப் புற கர்ப்பம்(Ectopic pregnancy) என்கிறோம். இவ்வாறு கருப்பைக்கு வெளியில் பதிந்தகருவானது அதிக நாட்கள் வளர முடியாது. அப்போது மிகுந்த ரத்தப்போக்கு இருக்கும். அடிவயிறு சுருட்டிப் பிடித்து வலிக்கும். தலைச்சுற்றல் ஏற்படும். மயக்கம் வரும். இந்த அறிகுறிகள் காணப்பட்டால், உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்துப் பார்த்து, உரிய சிகிச்சை எடுக்க வேண்டும். முத்துப்பிள்ளை கர்ப்பம் சிலருக்கு கர்ப்பமே உண்டாகியிருக்காது. மாறாக திராட்சை கொத்துகள்போல் நீர்க்கட்டிகள் கருப்பையை நிறைத்திருக்கும். இதற்கு முத்துப்பிள்ளை கர்ப்பம்(Molar pregnancy) என்று பெயர். இதற்கான முக்கிய அறிகுறியே மிகுந்த ரத்தப் போக்குதான். எனவே, இதையும் உடனடியாகக் கவனிக்க வேண்டும். கருப்பையில் காணப்படும் நீர்க்கட்டிகளை அகற்றுவதுதான் இதற்குரிய சிகிச்சை.

ஓய்வும் ஒரு சிகிச்சையே!

கர்ப்ப காலத்தில் மிகவும் குறைந்த அளவில் ரத்தக்கசிவு இருந்தால், வீட்டில் படுக்கையில் ஓய்வு எடுத்தாலே போதும். அப்போது குறைவான, மிக எளிய வேலைகளைச் செய்து கொள்ளலாம். மாறாக, ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.

ரத்தப்போக்கு முழுவதுமாக நின்ற பிறகு மீண்டும் எல்லா வேலைகளையும் செய்யலாம். ரத்தப்போக்கு இருக்கும்போது, தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்பது முக்கியம். இப்படியானவர்கள் ‘சிசேரியன் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுமோ’ எனப் பயப்படத் தேவையில்லை. சுகப்பிரசவம் ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இரண்டாவது டிரைமெஸ்டரில் ஏற்பட்டால்?

கருப்பையின் வாய்ப்பகுதியில் தோன்றும் சிறுநீர்க்கட்டிகள்(Polyps) காரணமாக இரண்டாவது டிரைமெஸ்டரில் ரத்தப்போக்கு ஏற்படலாம். இன்னும் சிலருக்கு கருப்பையின் வாய் இறுக்கமாக இல்லாமல் இருக்கலாம்(Cervical incompetence). இதனாலும் ரத்தப்போக்கு ஏற்படுவதுண்டு. அப்போது லேசான வெள்ளைப்படுதலும் ரத்தப்போக்குடன் சேர்ந்து காணப்படும்.

இரண்டாவது டிரைமெஸ்டரில் கருச்சிதைவு காரணமாக ரத்தப்போக்கு ஏற்படுவது மிகவும் அரிது. என்றாலும், இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கருப்பையின் வாய் பலமில்லாமல் திறந்திருக்குமானால், அதைத் தையல்போட்டு இறுக்குவார்கள்(Cervical cerclage). கர்ப்ப காலம் முடியும் வரை தையல் அப்படியே இருக்கும்.

இயல்புக்கு மாறான நச்சுக்கொடி

கர்ப்பிணிக்கு நச்சுக்கொடி இயல்பாக இல்லாமல் மாறி இருந்தாலும்(Circumvallate placenta), கருக்குழந்தையின் வளர்ச்சி சரியாக இல்லாதபோதும், குறித்த நாளுக்கு முன்பே பிரசவ வலி ஏற்படுகிறவர்களுக்கும் இரண்டாவது டிரைமெஸ்டரில் ரத்தப்போக்கு ஏற்படும். அப்போது கர்ப்பிணியின் வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து, காரணம் தெரிந்து மருத்துவர் சிகிச்சை அளிப்பார்.

மூன்றாவது டிரைமெஸ்டரில் ஏற்பட்டால்?

இந்தக் காலகட்டத்தில் கர்ப்பிணிக்கு ரத்தப்போக்கு இருப்பதுதான் ஆபத்து. கர்ப்பிணிக்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து நெருங்கலாம். எனவே, இப்போது ரத்தப்போக்கு இருக்கும் கர்ப்பிணிகளை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டும். இக்கால கட்டத்தில் கர்ப்பிணிக்கு ரத்தப்போக்கு ஏற்பட இரண்டு முக்கியக் காரணங்களைக் கூறலாம்.

ஒன்று, நச்சுக்கொடி விலகுவது(Placental abruption). மற்றொன்று, நச்சுக்கொடி கீழிறங்குவது(Placenta Previa). இவற்றில் நச்சுக்கொடி விலகுவதால் ஏற்படும் ரத்தப்போக்கு 100 கர்ப்பிணிகளில் ஒருவருக்குத்தான் ஏற்படுகிறது. நச்சுக்கொடி கருப்பைச் சுவற்றிலிருந்து விலகிவிடுவதால், ரத்தப்போக்கு ஏற்படுகிறது. அப்போது அடிவயிற்றில் கடுமையாக வலி உண்டாகும்.

வழக்கத்தில் இது கர்ப்பத்தின் கடைசி 12 வாரங்களில் ஏற்படும். நச்சுக்கொடி இயல்பான இடத்தை விட்டு விலகும்போது, குழந்தைக்குக் கிடைக்கவேண்டிய ரத்தம் குறையும். தேவையான பிராணவாயு கிடைக்காமல் போகும். இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இந்த நச்சுக்கொடி பிரச்னை சில கர்ப்பிணிகளுக்கு இரண்டாம் டிரைமெஸ்டரிலேயே ஏற்படுவதுண்டு.

யாருக்கு ஆபத்து அதிகம்?

இரண்டாம் முறையாக கருத்தரிப்பவர்கள், 35 வயதுக்குமேல் கருத்தரிப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், முந்தைய கர்ப்பத்தில் நச்சுக்கொடி விலகிய அனுபவம் உள்ளவர்கள் ஆகியோருக்கு நச்சுக்கொடி விலகுவதுண்டு.

நச்சுக்கொடி கீழிறங்கினால்?

200 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு நச்சுக்கொடி கீழிறங்கிவிடும், இவர்களுக்கு நச்சுக்கொடி கீழிறங்கி கருப்பைவாயை ஓரளவு மூடிவிடலாம்(Partial Placenta Previa) அல்லது முழுவதுமாக மூடிவிடலாம்(Total Placenta Previa). அப்போது வலி இல்லாமல் ரத்தப்போக்கு இருக்கும். இதுதான் இதற்குரிய முக்கிய அறிகுறி. பெரும்பாலானவர்களுக்கு 38 கர்ப்ப வாரங்களுக்கு முன்னரே இது ஏற்பட்டுவிடும்.

யாருக்கு அதிக வாய்ப்பு?

இரட்டைக் குழந்தைகள் பெற்றவர்கள், 35 வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பவர்கள், இதற்கு முந்தைய பிரசவத்தில் சிசேரியன் சிகிச்சை மேற்கொண்டவர்கள், ஏற்கெனவே கருச்சிதைவுக்குச் சிகிச்சை பெற்றவர்கள் ஆகியோருக்கு நச்சுக்கொடி கீழிறங்கும் வாய்ப்பு அதிகம். இவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரத்தப்போக்கு ஏற்பட்டதும் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

என்ன சிகிச்சை?

கருவின் வளர்ச்சி சரியாக இருக்குமானால், சிசேரியன் சிகிச்சையில் குழந்தை பிறக்கச் செய்வார்கள். ஒரு வேளை ரத்தப்போக்குக் கட்டுக்கடங்காமல் இருந்தால், குழந்தையின் வளர்ச்சியைக் கணக்கில் கொள்ளாமல், கர்ப்பிணியின் உயிருக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தைத் தவிர்ப்பதற்காக, உடனே சிசேரியன் சிகிச்சையில் குழந்தையை வெளியில் எடுத்து விடுவார்கள். ரத்தப்போக்கு மிக அதிக அளவில் இருந்தால், கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்த வேண்டியது அவசியப்படும். அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.